இந்தி திணிப்பு; தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை – முதலமைச்சர் பழனிசாமி

இந்திய அரசு கடந்த புதன்கிழமை புதிய கல்விக் கொள்கையை அறிவித்தது.

இந்திய சாதிய சமூகத்தில் பார்ப்பனரல்லாத, பிற்படுத்தப்பட்ட-மிகவும் பிற்படுத்தப்பட்ட-பட்டியலின ஏழை-எளிய மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் விதமாக இந்த புதிய கல்விக் கொள்கை இருப்பதாக கல்வி ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல அரசியல் காட்சிகள், இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

புதிய கல்விக் கொள்கையானது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைக்கு எதிராகவும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும் உள்ளது. மக்கள் மற்றும் கல்வியாளர்களின் எதிர்ப்புகளை மீறி அவசர அவசரமாக ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கையே இந்த புதிய கல்விக் கொள்கை. மும்மொழித் திட்டத்தின் மூலம் சமஸ்கிருத-இந்தி திணிப்பை இந்த புதிய கல்விக்கொள்கை முன்வைக்கிறது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை. இருமொழி கொள்கையே தொடரும். புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பெற்றிருப்பது வேதனை, வருத்தம் அளிக்கிறது.

தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழி கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்.

அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top