மத்திய அரசின் EIA 2020 அறிக்கை; அனைத்து மொழிகளிலும் வெளியிடக்கோரி கர்நாடகவில் வழக்கு!

பெருநிறுவனங்களுக்கு சாதகமாக உருவாக்கப்பட்டு, 3 மொழிகளில் மட்டுமே வெளியான சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020ஐ அனைத்து மொழிகளிலும் வெளியிட வழக்கு!  

சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 சட்டத்தை மாற்றியமைத்து, சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 என்ற பெயரில், பெரு நிறுவனங்களுக்கு சாதகமான சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது

இந்தியாவில் பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை தொடங்க, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ், அனுமதி பெற வேண்டும். அதன்படி, சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 சட்டத்தின் கீழ், திட்டம் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்ய வேண்டும். சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத திட்டமாக இருப்பின் அரசு அனுமதி வழங்கவோ, இல்லாதபட்சத்தில் அனுமதி மறுக்கவோ செய்யும். இந்த நடைமுறையை மாற்றியமைத்து, சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 என்ற பெயரில், பெரு நிறுவனங்களுக்கு சாதகமான சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கிடையே, சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை அனைத்து மாநில மக்களும் புரிந்து கொள்ளும் விதமாக ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள ஆங்கிலம், இந்தி தவிற குறைந்தது 10 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்று ஜூன் 30 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், EIA 2020 அறிக்கை 3 மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்கப்பட்டதில் மராத்தி, ஒடியா, நேபாளி ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே EIA 2020 அறிக்கை வெளியிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அனைத்து மொழிகளிலும் சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை வெளியிட்டு அதன் பின்னர் போதிய அவகாசம் வழங்கி கருத்து கேட்பு நடத்த வேண்டும். அது வரை சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 5-ம் தேதி விசாரணக்கு வருகிறது. வழக்கு விசாரணையில் நீதிமன்றம் அனைத்து மொழிகளிலும் அறிக்கை வெளியிட மத்திய அரசுக்கு ஆணை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top