பொய் செய்திகள், அவதூறு, கலவரங்களை தூண்டும் மாரிதாஸுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை!

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் குணசேகரன். பத்திரிகை துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக ராம்நாத் கோயங்கா விருது, விகடன் விருது என பல விருதுகள் பெற்றவர். அதேபோல, மூத்த தொகுப்பாளர் ஜீவசகாப்தன் ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக யூ-டியூப் சேனல் நடத்தி வரும் மாரிதாஸ் என்பவர் மேற்கண்ட இருவர் குறித்தும் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் பணியாற்றிய மூத்த செய்தியாளர் அசீப் உள்ளிட்டோர் குறித்தும், அவர்களின் தனிப்பட்ட விவரங்களை பற்றியும் அவதூறாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

அதில் நியூஸ் 18 அதிகாரி தனக்கு கடிதம் எழுதி இருந்ததாகவும் ஒரு மின்னஞ்சலை வெளியிட்டார். ஆனால் அந்த மின்னஞ்சல் போலியானது என்று அந்த அதிகாரி கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து மாரிதாஸ் மேல் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதில் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்லி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

நியூஸ் 18 தமிழின் ஆசிரியர் குணசேகரன் மாரிதாஸ் மீது ரூ.1.5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், நியூஸ் 18 நிர்வாகம் சார்பில் “மக்களிடையே மதப் பிளவு ஏற்படுத்தும் வகையிலும், செய்தியாளர்களை மிரட்டும் வகையிலும் மாரிதாஸ் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்” என்று நீதிமன்றத்தில் தனி தனியே புகார் மனு அளிக்கப்பட்டது.

மேலும், தன்னுடைய யூ- டியூப் சேனலின் பார்வையாளர்களை அதிகரிக்க வேண்டும் என்ற தனது தனிப்பட்ட ஆதாயத்திற்காக நியூஸ்18 தொலைக்காட்சி மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களை குறிவைத்து அவதூறு கருத்துகளை பரப்புவது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஊடக சுதந்திரத்திற்கும் மாரிதாஸ் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருவதால் நஷ்ட ஈடாக 1.5 கோடி ரூபாய் வழங்க மாரிதாஸுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தன்னுடைய செயலுக்கு மாரிதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நியூஸ் 18 தரப்பில் வாதிடப்பட்டது.

இதில் நியூஸ் 18 மனு மீதான விசாரணை இன்று நடந்தது. நியூஸ் 18 தரப்பில் மாரிதாஸ் கூறியது பொய் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, நியூஸ் 18 தொலைக்காட்சி மற்றும் அதன் ஊழியர்கள் குறித்து அவதூறு வீடியோக்கள் வெளியிட மாரிதாசுக்கு இடைக்கால தடை விதித்தார்.

இதை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன், “மாரிதாஸ் இதுவரை நியூஸ் 18 தமிழ்நாடு தொடர்பாக வெளியிட்ட வீடியோக்களை நீக்க வேண்டும். இதுவரை வெளியிட்ட அனைத்து அவதூறு வீடியோக்களையும் நீக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, தனி நபர் யாராக இருந்தாலும் ஆதாரமற்ற செய்திகளை வெளியிட கூடாது. வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் மாரிதாஸ் பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top