ஆண் வேடத்தில் தோழியுடன் 1,800 கிலோ மீட்டர் ஸ்கூட்டர் பயணம் செய்த பெண்ணின் கண்ணீர் கதை!

ஆண் வேடத்தில் தோழியுடன் 1,800 கிலோ மீட்டர் ஸ்கூட்டர் பயணம் செய்து தன் மகனை பார்க்க சென்ற பெண்ணின் கதை அனைவரையும் கலங்க வைத்துள்ளது.


இந்தியாவில் கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலுக்கு வந்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பொது போக்குவரத்து முடங்கியது. ஆனால் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் ஆட்டோ, டாக்ஸி மற்றும் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்கள் இயங்குகின்றன. எனினும் ஒரு சில பகுதிகளில் மட்டும்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், பொது போக்குவரத்து இன்னமும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. எனவே ஊரடங்கால் வேலையிழந்தவர்கள் மற்றும் அவசர தேவை இருப்பவர்கள் சைக்கிள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த வரிசையில் பெண் ஒருவர் தற்போது ஸ்கூட்டரில் 1,800 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளார். அவருக்கு துணையாக அவரது தோழியும் கூடவே சென்றுள்ளார். அவர்கள் இருவரும் பாதுகாப்பிற்காக ஆண்கள் போன்ற தோற்றத்தில் பயணம் செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் நகரை சேர்ந்தவர் சோனியா தாஸ். மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், பெண்களுக்கான விடுதியில் தங்கி அவர் வேலை செய்து வந்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக வேலை இழந்ததால், அவரால் வாடகை கொடுக்க முடியவில்லை. எனவே விடுதியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த நேரத்தில், புனேவில் வசிக்கும் அவரது தோழி சாபியா பனோ உதவி செய்துள்ளார். தனது இல்லத்தில் சோனியா தாசுக்கு அவர் அடைக்கலம் கொடுத்தார்.

புனேவில் நாட்களை கழித்து கொண்டிருந்த நேரத்தில், தனது 5 வயது மகனை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் சோனியா தாசுக்கு உருவானது. உடனே ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு அவர் கிளம்பி விட்டார். அவருடன் சாபியா பனோவும் சென்றுள்ளார். புனேவில் இருந்து ஜாம்ஷெட்பூர் தோராயமாக 1,800 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. ஆனால் அவர்கள் இருவரும் பாதுகாப்பாக சென்று சேர்ந்துள்ளனர். புனேவில் இருந்து கடந்த ஜூலை 20ம் தேதி புறப்பட்ட அவர்கள், ஜூலை 24ம் தேதி ஜாம்ஷெட்பூர் சென்று சேர்ந்தனர்.

1,800 கிலோ மீட்டரை ஸ்கூட்டரில் கடப்பதற்கு அவர்களுக்கு நான்கு நாட்கள் ஆகியுள்ளது. இது தொடர்பாக சோனியா கூறுகையில், ”ஜாம்ஷெட்பூர் சென்றதும், எனது மகன் மற்றும் குடும்பத்தினரை பாதுகாப்பான தொலைவில் இருந்து பார்த்தேன். அவர்கள் மாடியின் மேலே நின்று கொண்டிருந்தனர். நான் சாலையின் ஓரத்தில் நின்று அவர்களை பார்த்தேன். அதன்பின் நானும், எனது தோழியும் தனிமைப்படுத்துதல் முகாமும் அழைத்து செல்லப்பட்டோம். மறுநாள் (ஜூலை 25ம் தேதி) எனது மகன் அங்கு அழைத்து வரப்பட்டார். எனக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகுதான் எனது மகன் அங்கு அழைத்து வரப்பட்டார்” என்றார். சாபியா பனோவிற்கு லேசான காய்ச்சலும், சோனியாவிற்கு லேசான சுவாச பிரச்னைகளுடன், இருமலும் இருந்துள்ளது. எனவே அவர்கள் இருவருக்கும் ஜார்கண்ட் மாநில சுகாதார துறை கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொண்டது. இதில், இருவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சோனியா தாஸ் மேலும் கூறுகையில், “என்னிடம் பணம் இல்லை. வேலையும் இல்லை. அத்துடன் தங்குவதற்கு இடமும் இல்லை. எனவே புனேவில் உள்ள சாபியா பனோவின் வீட்டிற்கு சென்று விட்டேன். ஜார்கண்ட் முதல் அமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு நான் ட்வீட் செய்தேன். அத்துடன் மஹாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில அரசுகளின் உதவி எண்களை அழைத்தேன். ஆனால் எதுவும் வேலை செய்யவில்லை. இது தவிர நடிகர் சோனு சூட்டிற்கும் நான் ட்வீட் செய்தேன். ஆனால் அதன் மூலமும் எந்த பிரயோஜனமும் ஏற்படவில்லை. எனவே நானாகவே ஜாம்ஷெட்பூர் சென்று விடும் முடிவை எடுத்தேன்” என்றார்.

சோனியா தாஸின் கணவர் அபிஷேக் கோஸ் இதய நோயாளி என கூறப்படுகிறது. எனவே குடும்ப பொறுப்புகளை சோனியா தாஸ் ஏற்றுக்கொண்டுள்ளார். சோனியா தாசும், சாபியா பனோவும் ஜாம்ஷெட்பூர் வரும் வழியில், பத்து எரிபொருள் நிலையங்கள் மற்றும் மூன்று தாபாக்களில் ஸ்கூட்டரை நிறுத்தியுள்ளனர். கொரோனா பாதித்த மாநிலங்கள் வழியாக நான்கு நாட்கள் நெடுஞ்சாலையில் பயணம் செய்தபோதும் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை அவர்கள் இருவரும் எதிர்கொள்ளவில்லை.

இது குறித்து சோனியா தாஸ் கூறுகையில், ”வடாபாவ் மற்றும் தண்ணீர் மூலம்தான் நாங்கள் பெரும்பாலான நேரங்களை சமாளித்தோம். நாங்கள் ஹெல்மெட் அணிந்திருந்தோம். அத்துடன் பேண்ட் மற்றும் சட்டையும் அணிந்திருந்ததால், பெரும்பாலான மக்கள் எங்களை ஆண்கள் என நினைத்திருக்க கூடும்” என்றார்.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top