பி.எம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றக் கோரிய வழக்கு; தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

மத்திய அரசு தொடங்கிய பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையில் தனிநபர்கள், நிறுவனங்கள் மூலம் அளிக்கப்பட்ட நன்கொடையை, தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீதான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

கொரோனா நிவாரணத்திற்காக உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் என்ற பிரத்யேக நிவாரண நிதியம் ‘பப்ளிக் அதாரிட்டி’ அல்ல. எனவே, ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வராது என்று கூறி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களை அளிக்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது.

அதில் ‘பிஎம் கேர்ஸ் நிதியம் தகவல் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 2 ஹெச்-ன் படி பொது அதிகாரத்தின் கீழ் வராது. இது தொடர்பான விவரங்களை pmcares.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டு விவரங்களை அளிக்க மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் சிபிசிஎல் எனும் தனியார் தொண்டு நிறுவனம் பிஎம் கேர்ஸ் நிதி அனைத்தையும் தேசிய பேரிடர் நிதிக்குக் கொண்டு வரக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கு அசோக் பூஷண் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. ஏற்கெனவே இந்த மனுவில் பதில் அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 17-ம் தேதி நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்த வழக்குத் தொடர்பாக மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், ‘பிஎம் கேர்ஸ் நிதி என்பது தாமாக முன்வந்து நன்கொடை வழங்குவோரிடம் இருந்து பெறும் அறக்கட்டளையாகும். தேசிய பேரிடர் நிதி, மாநிலப் பேரிடர் நிதிக்கு வழக்கம்போல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது’ என வாதிட்டார். மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராகி வாதிடுகையில், ‘பிஎம் கேர்ஸ் நிதிக்கு நன்கொடை அளிப்பவர்களைப் பற்றி சந்தேகப்படவில்லை. ஆனால், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்துக்கு முரணாக பிஎம் கேர்ஸ் நிதி இருக்கிறது.

தேசிய பேரிடர் நிதி அமைப்பு மத்திய தலைமைத் தணிக்கை அதிகாரியால் தணிக்கை செய்யப்படுகிறது. அதேபோன்று பிஎம் கேர்ஸ் நிதியும் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்’ எனக் குறிப்பிட்டார். இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்காமல் ஒத்திவைத்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top