தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சை ரூ.2,300:கட்டண நிர்ணயம் : கேரள அரசு வெளியீடு

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் மக்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்போது அவர்களிடம் வசூலிக்க வேண்டிய கட்டண நிர்ணயம் குறித்த விவரங்களையும், விதிகளையும் மாநில அரசு நேற்று வெளியிட்டது.

கேரள மாநிலத்தில்தான் நாட்டிலேயே முதல் கொரோனா நோயாளி கடந்த ஜனவரி 30-ம் தேதி கண்டறியப்பட்டார். சீனாவின் வூஹான் நகரில் இருந்து வந்திருந்த அந்த மருத்துவ மாணவிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு குணமானார்.

ஆனால், அதன்பின் கொரோனா நோயாளிகள் அதிகரித்தபோதிலும் கேரள மாநில அரசின் கடுமையான விதிமுறைகள், லாக்டவுன், தீவிர சிகிச்சை முறைகளால் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தது.

ஆனால், கடந்த 10 நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து 4-வது நாளாக நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் புதிதாக தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதுவரை கேரள மாநிலத்தில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு, தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது வசூலிக்க வேண்டிய கட்டண விவரங்களை கேரள அரசு நேற்று வெளியிட்டது.

மாநில சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ காருண்யா ஆரோக்கிய சுரக்ஷா பதாதி(கேஏஎஸ்பி) காப்பீடு திட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள், இதில் சேராத தனியார் மருத்துவமனைகளுக்கும் கொரோனா நோயாளிகளிடம் வசூலிக்க வேண்டிய சிகிச்சைக் கட்டணம் தொடர்பான உத்தரவை அனுப்பிவிட்டோம்.

கொரோனாவால் பாதிக்கப்படும் மக்கள் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம், தனியார் மருத்துவமனைகளிலும் விருப்பமிருந்தால் சிகிச்சை பெறலாம். அரசு , தனியார் மருத்துவமனைகள் இரண்டுமே கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளன. இதில் மாநில அரசின் காருண்யா ஆரோக்கிய சுரக்ஷா பதாதி காப்பீடு உள்ளவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

இதுவரை மாநிலத்தில் 28 மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சையளிக்க உருவாக்கப்பட்டுள்ளன.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் சாதாரண வார்டில்இருந்தால் நாள்தோறும் ரூ.2,300 கட்டணம் வசூலிக்கலாம். அதிக கவனிப்பு உள்ள பிரிவு (ஹெச்டியு) சிகிச்சை பெற்றால் நாள்தோறும் ரூ.3,300 கட்டணம் வசூலிக்கலாம்.

ஐசியுவில் சிகிச்சையளித்தால் ரூ.6,500 கட்டணமும், வெண்டிலேட்டர் உதவியுடன் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தால் ரூ.11,500 கட்டணமும் வசூலிக்கலாம்.

ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு நபர் ஒருவருக்கு ரூ.2,750 கட்டணமும், ஆன்ட்டிஜென் பரிசோதனைக்கு ரூ.625 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்பரிசோதனைக்கு ரூ3 ஆயிரமும், ட்ரூநாட் ஸ்டெப்ஓன்- ஸ்டெப் 2 பரிசோதனைக்கு ரூ.1,500 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளிடம் இருந்து வசூலிக்கக்கூடாது, அவ்வாறு வசூலித்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில சுகாதார அமைச்சர் சைலஜா தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top