போலீசாருடன் செயல்பட்டுவந்த ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு கலைப்பு – தமிழக அரசு அதிரடி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை, மகன் காவல்நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் பிரன்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சட்டத்துக்கு புறம்பாக இந்த அமைப்பு பயன்படுத்தப்படுவதாக தமிழகம் முழவதும் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த அமைப்பை கலைக்க வேண்டும் என்று மக்கள் மற்றும் அரசியல் இயக்கங்கள் தமிழகம் முழுவதும் கோரிக்கைகள் எழுப்பின. மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பிரன்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர்களை பின் இருந்து யார் இயக்குகிறார்கள் என்ற விசாரணையையும் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வழிவகை எழுந்தன.

இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்நிலையங்களில் பிரன்ட்ஸ் ஆப் போலீஸை பணியில் ஈடுபடுத்த தடை விதிக்கப்படுவதாக எஸ்.பி ஜெயக்குமார் அறிவித்தார்.

இதேபோன்று சில வருடங்களாக போலீசாருடன் இயங்கிவரும் இந்த அமைப்பை எந்த விசாரணையும் இன்றி திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பிரன்ட்ஸ் ஆப் போலீசாரை பயன்படுத்த வேண்டாம் என்று காவல்நிலைய ஆய்வாளர்களுக்கு டிஐஜி ஆனி விஜயா அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, 5 மாவட்டங்களில் உள்ள 500 க்கும் மேற்பட்ட பிரன்ட்ஸ் ஆப் போலீஸ் பணிக்கு வர வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதேபோல, தமிழகம் முழுவதும் மாவட்ட எஸ்.பிக்கள் வாய்மொழி உத்தரவு மூலம் ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

ஆனால், சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், ‘சென்னையில் ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு தொடர்ந்து பயன்படுத்தப்படும்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட் ஆப் போலீஸ் அமைப்பை கலைப்பதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ‘டி.ஜி.பி அளித்த அறிக்கையின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் செயல்பட்டுவந்த ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு கலைக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகம் முழுவதும் உள்ள ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் மீது விசாரணை நடத்தப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இதில் குறிப்பிடப்படவில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top