தமிழகத்தில் தொடரும் சிறுமிகள் மரணம் – விசாரணையில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே சீமை கருவேல காட்டில் எரிந்த நிலையில் 14 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. சிறுமியின் சடலத்தை கைப்பற்றி சோமரசம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

திருச்சி மண்டல ஐ.ஜி, திருச்சி சரக டிஜஜி, மாவட்டக் காவல்காணிப்பாளர் ஆகியோர் நேற்றிரவு சோமரசம்பேட்டை காவல்நிலையத்தில் இருந்து விடிய விடிய விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில், சந்தேகத்திற்கு இடமான 10 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

இதனிடையே, சிறுமியின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. தீக்காயங்களால் சிறுமி உயிரிழந்ததாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பின் சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இதனிடையே தமிழகத்தில் தொடர்ந்து வரும் சிறுமிகள் உயிரிழப்பு தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த வாரம் புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இதேப்போல் திருச்சி சோமரசம்பேட்டையில் 14 வயது சிறுமி எரித்து கொல்லப்பட்டார். இச்சம்பவங்கள் தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் ஸ்கைப் மூலம் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top