8 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற போகும் குவைத்து அரசாங்கம்

அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில், சொந்த நாட்டில் வேலை கிடைக்காமல் அங்கு சென்று வேலை செய்யும் தொழிலாளர்களே அதிகமாக உள்ளனர். மொத்தமுள்ள 43 லட்சம் மக்கள் தொகையில், சுமார் 13 லட்சம் மட்டுமே குவைத்தியர்கள் ஆவர். மீதமுள்ள சுமார் 30 லட்சம் பேரும் வெளிநாட்டினர் ஆவர். இதில் 14.5 லட்சம் பேர் இந்தியர்கள் அந்தவகையில் குவைத்தில் இந்தியர்களே அதிகமாக வாழ்கின்றனர்.

கொரோனா காரணமாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் பொருளாதார மந்தநிலையால் அங்குள்ள அரசு வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எதிரான மனநிலையில் உள்ளது. குறிப்பாக வெளிநாட்டு குடிமக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என அரசு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக தங்கள் நாட்டில் வாழும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை 70 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக குறைக்க வேண்டும் என பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா கடந்த மாதம் பரிந்துரை ஒன்றை வழங்கினார்.

அதன்படி வெளிநாட்டினரின் எண்ணிக்கையை படிப்படியாக குறைப்பதற்கான வரைவு மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு நாடாளுமன்ற சட்டம் மற்றும் சட்டமன்றக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதைத்தொடர்ந்து குவைத்தில் வாழும் வெளிநாட்டவர் மற்றும் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த மசோதாவின்படி குவைத்தின் மக்கள் தொகையில் இந்தியர்களின் எண்ணிக்கை 15 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது என்பது விதிமுறையாகும். இதனால் 8 லட்சம் இந்தியர்கள் குவைத்தில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து குவைத் நாடாளுமன்ற சபாநாயகர் மார்சவுக் அல் கனேம் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘குவைத்தின் மக்கள் தொகை கட்டமைப்பில் உண்மையான பிரச்சினை ஒன்று உள்ளது. 70 சதவீதத்தினர் வெளிநாட்டினர். இதில் இன்னும் தீவிர பிரச்சினை என்னவென்றால், வெளிநாட்டினரில் 13 லட்சம் பேர் படிப்பறிவில்லாதவர் அல்லது வெறும் எழுதப்படிக்கத்தெரிந்தவர். இப்படிப்பட்டவர்களை குவைத் விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.

இவரின் இந்த பேச்சு அங்கு அந்த நாட்டின் கட்டமைப்புக்காக அதிகமான உடல் உழைப்பை செலுத்தி பாடுபட்ட தொழிலார்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய தொழிலாளர்கள் மட்டும் இல்லாமல் பல நாட்டின் தொழிலாளர்கள் மற்றும் அங்கு குடியேறியவர்கள் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top