தனிமனித இடைவெளி, முக கவசம்; மீறுவோர்க்கு 2 ஆண்டு சிறை – கேரளா அரசு

கொரோனா பரவலை நேர்த்தியாக கையாண்டு கட்டுப்படுத்தியது. இந்தியாவின் மத்திய அரசே கொரோனாவை சரியாக கையாளமுடியாமல் திணறிவருகிறது, ஆனால் கேரளா சுகாதார அமைச்சர் ஷைலஜா அவர்களின் தலைமையில் கேரளாவில் உலகம் கண்டிடாத அளவுக்கு நோய் தொற்றை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். இந்த செயலுக்காக அவரை உலக சுகாதார துறை பாராட்டியது.

ஆனால், தற்போது கேரள மாநிலத்திலும் கொரோனாவின் பரவல் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது.

அங்கு தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்து விட்டது. பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உள்ளது. 3048 பேர் குணம் அடைந்துள்ளனர். 2131 பேர் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில் கரோனா வைரஸை எதிர்த்துப் போரிடுவதற் காக மாநில தொற்றுநோய் அவசர சட்டத்தில் கேரள அரசு திருத்தம் செய்துள்ளது. இதன் அடிப்படையில் புதிய வழிகாட்டு விதிகளை முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு பிறப்பித்துள்ளது.

இந்த விதிகள் 2021 ஜூலை வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

தொற்று நோய் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள முக்கிய திருத்தங்கள் இவை:-

பொது இடங்களில், வேலை பார்க்கும் இடங்களில், வாகனங்களில் செல்கையில், மக்கள் கூடும் இடங்களில் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில், நிகழ்வுகளில் கண்டிப்பாக எப்போதும் 6 அடி தொலைவுக்கு தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

கடைகளில், வர்த்தக நிறுவனங்களில் ஒரே நேரத்தில் 25 பேருக்கு மேல் கூடக்கூடாது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்த பிறகே உள்ளே வர வேண்டும். கடை உரிமையாளர்கள் சானிடைசர் திரவம் வைத்திருக்க வேண்டும்.

திருமணங்களில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். அனைவரும் முக கவசம் அணிந்து, கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்துகொள்ளுதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் வேண்டும். துக்க நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும்.

வேலை நிறுத்தம், தர்ணா, பேரணி, போராட்டங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்று 10 பேர் மட்டுமே இதில் கலந்து கொள்ளலாம். பொது இடங்களில், சாலைகளில், நடைபாதைகளில் எச்சில் துப்பக்கூடாது.வெளியிடங்களில் இருந்து கேரளா வருவோர் வருவாய் துறையின் ‘ஜக்ரதா’ இணையதளத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும்.

இந்த திருத்தங்களில் எதை மீறினாலும், அந்த நபருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

நமது நாட்டிலேயே முக கவசம் அணிவதை, தனிமனித இடைவெளியை பின்பற்றுவதை கடுமையாக ஆக்கி, தண்டனைக்கு உரிய குற்றமாக அறிவித்துள்ள முதல் மாநிலம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top