வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை காப்பாற்றாத மத்திய,மாநில அரசுகளை கண்டித்து – வைகோ ஆர்ப்பாட்டம்

கொரோனா காரணமாக உலக நாடுகள் தார்வதேச பயணங்களை முடக்கியுள்ளது. இந்தியாவும் உலகநாடுகள் உடனான வான் ஊர்தி போக்குவரத்தை நிறுத்திவிட்டது. தனது இதன் காரணமாக அயல்நாடுகளில் சிக்கித் தவிக்கின்ற தமிழர்களை, உடனடியாகத் தமிழகம் மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லம் முன்பு இன்று (05.07.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,

“கொரோனா தாக்குதலால், வளைகுடா நாடுகளில் உள்ள தமிழகத் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை இழந்து விட்டார்கள். அன்றாட உணவுக்கு வழி இன்றித் தவிக்கின்றார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் மருத்துவமனைகளில் இடம் கிடைப்பது இல்லை. ஏற்கனவே வசிக்கின்ற அறைகளில் பல தோழர்களுடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. அவர்களது நிலையை எண்ணி, தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

தங்கள் சொந்தச் செலவில் ஏற்பாடு செய்து, புறப்பட்டு வர இருந்த வான் ஊர்திகளையும், கடைசி நேரத்தில் இந்திய அரசு நிறுத்திவிட்டது. கேரள அரசு, தங்கள் மாநிலத்தவரை மீட்டு வருகின்ற பணிகளை வெற்றிகரமாகச் செய்து வருகின்றது. அதேபோல், பல மாநில அரசுகளும் இயங்கி வருகின்றன. ஆனால், தமிழக அரசு வான் ஊர்திகள் வந்து இறங்குவதற்கு ஒப்புதல் தரவில்லை. வந்தே பாரத் திட்டத்தின் கீழ், தமிழகத்திற்குப் போதுமான வான் ஊர்திகளை நடுவண் அரசு அறிவிக்கவில்லை. எனவே, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை, நடத்துகின்றோம்.அயல்நாடு வாழ் தமிழர்களின் நலன்களைப் பேணுவதற்காக, தமிழக அரசு ஒரு புதிய துறையை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம் எனக் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை முழக்கங்களை வைகோ எழுப்பினார். ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், சைதை சுப்பிரமணி உள்ளிட்ட 40 பேர் உடன் பங்கேற்று, முழக்கங்களை எழுப்பினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top