அடித்து துன்புறுத்திய தூத்துக்குடி இன்ஸ்பெக்டர் மீது பெண் புகார்- விசாரணைக்கு உத்தரவு

தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை சாந்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

நான் தூத்துக்குடியில் தனியார் பள்ளியில் இந்தி, ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். எனது அண்ணன் வாசுதேவன், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்தார். கடந்த பிப்ரவரி 22-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு அவசரகால மின்சார பழுதை பார்ப்பதற்கு அலுவலகத்திற்கு சென்றுள்ளார். ஆனால், காலையில் அவர் விபத்தில் இறந்ததாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், என் அண்ணனை ரோந்து பணியில் இருந்த போலீ்ஸ்காரர் ஒருவர் மோட்டார் சைக்கிளால் இடித்து, பின்னர் அடித்து காயப்படுத்தியதாக தெரியவந்தது. இதனால் நாங்கள் அதிர்ச்சியடைந்து போலீஸ்துறையின் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு உள்துறை அதிகாரிகளுக்கும் நீதி வேண்டும் என்று கேட்டு புகார் அளித்தோம்.

இந்த நிலையில் அந்த புகார் மனுக்கள் மீதான விசாரணைக்காக கடந்த ஜூன் 1-ந் தேதி தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையம் சென்றேன். அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், புகார் மனுக்களை வாபஸ் வாங்கும்படி வற்புறுத்தினார்.

நான் மறுத்ததால் அவர் என்னை அடித்தார். பின்னர் தனது காலால் என் வயிற்றில் பலமுறை எட்டி உதைத்தார். தகாத வார்த்தைகள் சொல்லி திட்டினார். மேலும், என்னை போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதாக பெண் போலீஸ் ஒருவரிடம் புகார் பெற்று, என்னை கைது செய்தார். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது.

போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இருந்தால் நிச்சயமாக, எனக்கு நேர்ந்த கொடுமைகள் அனைத்தும் பதிவாகியிருக்கும். பெண் என்றும் பாராமல் என்னிடம் மிருகத்தனமாக நடந்து கொண்ட சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசுக்கு உத்தரவிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top