சாத்தான்குளம் சம்பவம்; முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: விரைந்து விசாரிக்கக் கோரி மீண்டும் மனு

சாத்தான் குளத்தில் ஜூன் 19-ம் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்தது.

விசாரணை சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஆய்வாளர் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என்றால் இந்த வழக்கு முடியும் வரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையில் உள்துறை இருக்கக் கூடாது. இந்த வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் நேற்று மனுத்தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், “வழக்குத் தொடர்பான எந்த ஒரு விசாரணையும் நடக்கும் முன்னரே, தந்தை-மகன் உடல்நலக் கோளாறு காரணமாகத்தான் உயிரிழந்தார்கள் என முன்னுக்குப் பின் முரணாக, பொய்யான தகவலை முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

தற்போது விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை அமைப்பான சிபிசிஐடி, முதல்வர் கையில் உள்ள உள்துறையின்கீழ் வருகின்றது. எனவே, அந்த இலாகாவை முதல்வர் பழனிசாமி வைத்திருந்தால் இந்த இரட்டைக் கொலை வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறாது, விசாரணை திசை மாறாமல் இருக்க, உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடைபெற வேண்டும். எனவே, இந்த வழக்கு முடியும் வரை உள்துறை இலாகா பொறுப்பை முதல்வர் பழனிசாமி வைத்திருக்கக்கூடாது.

இது தொடர்பாகத் தகுந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்“ என ராஜராஜன் கோரியிருந்தார்.

இந்நிலையில் சாத்தான்குளம் விவகாரம், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செயப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்கப் பட்டியலிடக் கோரி மீண்டும் இன்று மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார். தனது மனுவை விரைந்து விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றப் பதிவாளரிடம் வழக்கறிஞர் ராஜராஜன் இன்று மனு அளித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top