கோவில்பட்டி கிளைச் சிறையில் இன்னொரு கைதிக்கு திடீர் உடல்நலக்குறைவு: காவலர்கள் காரணமா?

கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்த கைதிக்கு திடீர் உடல் நலக்குறைவு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாத்தான்குளம் அருகே தெற்குப் பேய்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (38). கடந்த மே 18-ம் தேதி ஜெயக்குமாரை ஒரு கும்பல் கொலை செய்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சாத்தான்குளம் போலீஸார் மே 20-ம் தேதி மேல பனைகுளத்தைச் சேர்ந்த சூசை மகன் ராஜாசிங் (36) உள்ளிட்ட 10 பேரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

கடந்த 17-ம் தேதி ஜெயக்குமார் கொலை வழக்கு விசாரணைக்காக சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும் அவருக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்று சிறை கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் காவலர்கள் ராஜாசிங்கை கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஏற்கெனவே கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த இரண்டு அப்பாவி நபர்களான ஜெயராஜ், மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு என்று கூறப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அடுத்தடுத்து மருமமான முறையில் உயிரிழந்தனர். அவர்கள் காவலர்களின் கொடுமையாக மனிதாபிமானம் இன்றி தாக்கப்பட்டு உயிர் இழக்க நேர்ந்தது என்று மக்கள், வணிகர்கள் அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார். மேலும், காவலர்கள் மீது கொலைவழக்கு பதியும் படி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், தற்போது சாத்தான்குளத்தில் சேர்ந்த மேலும் ஒரு கைதி கோவில்பட்டி கிளை சிறையில் இருந்து உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் இன்று காலை கோவில்பட்டி கிளை சிறைக்கு வந்து ஆய்வு நடத்தினார். மேலும், கிளை சிறையில் உள்ள சிறைவாசிகள் மற்றும் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்துவருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top