தூத்துக்குடியில் தந்தை, மகன் ‘லாக்அப்’ மரணம் – தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்தி வருபவர் பென்னிங்ஸ் (31). கடந்த 20-ம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக போலீசார் பென்னிங்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் இருவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை என்று ககூறி கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

22-ம் தேதி நெஞ்சுவலியால் மயங்கி விழுந்தார் என்று கோவில்பட்டி மருத்துவமனையில் மகன் பென்னிக்ஸ் சேர்க்கப்பட்ட போது அவர் முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். பிறகு தந்தை ஜெயராஜூம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவரும் இறந்துவிட்டார். இப்படி இருவரும் காவல்துறை கண்காணிப்பில் மர்மமான முறையில் உயிர் இழந்துள்ளனர்.

காவல்துறையினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகச் சொல்லி, காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும் மகனும் காவலர்களால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டதால் தான் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்தார்கள் என்று அவர்களது உறவினர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள், சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு, திருச்செந்தூர் – நாகர்கோவில் சாலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், காவல் துறையினரால் இரண்டு அப்பாவிகள் உயிரிழந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் அனைவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக டி.ஜி.பி.யிடம் திமுக் எம்.பி கனிமொழி புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், சாத்தான்குளத்தில் 2 வணிகர்கள் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரவைத் தலைவா் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top