‘இரண்டாம் அலை கொரோனா’ மரபணு வரிசையை உலக சுகாதார நிறுவனத்திடம் ஒப்படைத்தது சீனா

சீனாவில் ஜின்பாடி சந்தையில் இருந்து பரவத்தொடங்கிய இரண்டாம் அலைவரிசையில் வந்த கொரோனா மரபணுவை உலக சுகாதார நிறுவனத்திடம் சீனா ஒப்படைத்தது,

சீனா வூகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றுக்களை கடந்த ஏப்ரல் மாதம் சீனா கட்டுப்படுத்தியது. அதைத் தொடர்ந்து அங்கு இயல்பு நிலை திரும்பத்தொடங்கியது. மக்கள் வழக்கமான வாழ்க்கைக்கு திரும்பினர்..

56 நாட்ளுக்கு பிறகு கடந்த 11-ந் தேதி முதல் சீன தலைநகரான பீஜிங்கில் மீண்டும் தொற்று அதனுடைய இரண்டாம் கட்ட அலையை உருவாக்கியது வேகமாக பரவத்தொடங்கியது. இதற்கு அந்த நகரத்தின் பெரும்பாலான காய்கறி, இறைச்சி தேவைகளை வினியோகிக்கக்கூடிய ஜின்பாடி மொத்த சந்தைதான் காரணம் என தெரிய வந்தது.

அங்கு இறக்குமதி செய்யப்பட்ட சால்மான் மீன்களை வெட்டும் பலகைகளில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து பீஜிங்கில் கொத்து கொத்தாக கொரோனா பரவி வருகிறது. இதையடுத்து அங்குள்ள மக்களுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டது. சந்தையையொட்டியும், அதன் சுற்றுப்புறங்களிலும் வசிக்கிற மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது.

இப்போது ஜின்பாடி சந்தையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொற்றுகள், ஐரோப்பாவில் இருந்து வந்தவை என சீன விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறினர். இதுபற்றிய தகவல்களை பீஜிங்கில் இருந்து வெளிவரும் குளோபல் டைம்ஸ் ஏடு வெளியிட்டது.

அதுபற்றி சீன நச்சு உயிரியல் நிபுணர்கள், “உறைந்த உணவில் (சால்மன் மீன்கள்) சீல் வைத்து குளிர்ந்த மற்றும் ஈரமான நிலையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருப்பதால், கொரோனா வைரஸ் போக்குவரத்தின்போது மாற்றம் அடையவில்லை” என கருத்து தெரிவித்தனர்.

இதுபற்றி சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வூ ஜூன்யோ நேற்று முன்தினம் பீஜிங்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, பீஜிங்கின் தற்போதைய கண்டுபிடிப்புகள் கடந்த ஆண்டு வூகானில் கொரோனா வைரஸ் தொற்று வெடித்ததை நினைவூட்டுவதாக கூறினார்.

ஆனால், இதை உலக சுகாதார நிறுவனம் உடனடியாக அங்கீகரித்து விடவில்லை. இதுபற்றி சீனாவிடம் பல கேள்வி எழுப்பி பதில் கேட்டு இருந்தது

இந்த நிலையில் தற்போது பீஜிங் நகர ஜின்பாடி சந்தையில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரசின் மரபணு வரிசையை உலக சுகாதார நிறுவனத்திடம் சீன நோய் கட்டப்பாடு மற்றும் தடுப்பு மையம் வழங்கி உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உலக சுகாதார நிறுவனம் ஆராய்ந்து, இந்த வைரசின் தோற்றம் பற்றிய தனது உறுதியான கருத்தை பகிரங்கமாக தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையே சீனாவில் மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 22 பேர் தலைநகர் பீஜிங்கை சேர்ந்தவர்கள்.

இதுபற்றி சீன தேசிய சுகாதார கமிஷன் நேற்று கூறுகையில், “இப்போது சீனாவில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. ஏழு பேருக்கு எந்த அறிகுறியும் இன்றி தொற்று ஏற்பட்டுள்ளது. பீஜிங்கில் 22 பேருக்கு உள்நாட்டு தொடர்பு மூலம் பரவி உள்ளது. தற்போது மொத்தம் 108 பேர் எந்த அறிகுறிகளும் இன்றி கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இருக்கின்றனர். அவர்களில் 57 பேர் வெளிநாட்டு தொடர்புகளை கொண்டிருந்தவர்கள். அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.

தற்போது சீனாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83 ஆயிரத்து 352 ஆக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 4,634 ஆக இருக்கிறது.

வூகானில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி தோன்றி பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் பற்றிய தகவல்களை வெளியிடாமல் சீனா மூடி மறைத்து விட்டது என்பதுதான் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நீண்ட கால குற்றச்சாட்டாக உள்ளது. ஆனால் சீனா, அந்த வைரஸ் தொற்று எங்கோ உருவானது, வூகானில் காணப்பட்டது என கூறியது.

இந்த நிலையில் சமீபத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், கொரோனா வைரஸ் வூகானில் தோன்றியது, அது தோன்றியதாக கூறப்படுகிற டிசம்பர் 1-ந் தேதிக்கு பதிலாக கடந்த ஆகஸ்டு மாதத்தின் பின்பகுதியிலேயே அங்கு தோன்றியிருக்கக்கூடும் என செயற்கை கோள் படங்களை ஆராய்ந்து கூறினர். ஆனால் இந்த ஆய்வை அபத்தமானது, மேலோட்டமான தகவல்களை அடிப்படையாக கொண்டது என நிராகரித்தது. இருப்பினும் சமீபத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் முடிவு எடுக்கும் முக்கிய அமைப்பான உலக சுகாதார சபை, இந்த தொற்றின் தோற்றம் பற்றி விசாரணை நடத்துவதற்கு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியது. சீனாவும் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளது.

இந்த நிலையில்தான் சீனாவில் இரண்டாவது அலைக்கு வழிவகுத்துள்ள பீஜிங் ஜின்பாடி சந்தையில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஐரோப்பாவில் இருந்து வந்திருப்பதாக கூறி, அதற்கான மரபணு வரிசையை உலக சுகாதார நிறுவனத்திடம் சீனா அளித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

,


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top