பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி! சீனா ஊடுருவவில்லை என்றால் ஏன் சண்டை நடந்தது?

லடாக்-கல்வான் எல்லைக்குள் சீனா அத்துமீறவில்லை என்றால் சண்டை ஏன் நடந்தது? இந்தியா ஏன் 20 உயிர்களை இழந்தது? என பிரதமருக்கு முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே பிரதமர் தலைமையில் சீன விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசிக்கப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் மோடி,


“இந்தியாவிற்குள் சீனப்படைகள் ஊடுருவவில்லை. ஊடுருவ முயன்றவர்களுக்குத் தக்கப் பாடம் கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நமது ஆயுதப் படைகள் மேற்கொள்ளும்” என தெரிவித்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவவில்லை என பிரதமர் கூறுகிறார். அது உண்மை என்றால், மே மாதம் 5 மற்றும் 6-ந்தேதிகளில் அங்கு ஏன் பிரச்சனை ஏற்பட்டது?

ஜூன் 16-17-ம் தேதிகளில் இருநாட்டு வீரர்களிடையே சண்டை நடந்தது ஏன்? இந்தியா ஏன் 20 உயிர்களை இழந்தது? சீனா ஊடுருவவில்லை என்றால் ஜூன் 6-ந்தேதி நடந்த பேச்சுவார்த்தை என்ன? இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவவில்லை என்றால் நிலைமையை மீட்டெடுப்போம் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை விட்டாரே… அது ஏன்? ஊடுருவல் இல்லை என்றால் துருப்புகளை விடுவித்தல் பற்றி இரு நாடுகள் ஏன் அதிகம் பேசிக்கொண்டனர்? அப்படியானால், சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த என்ன இருக்கிறது? மேஜர் ஜெனரல்கள் ஏன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள், எதைப் பற்றி?

இவ்வாறு ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top