மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா? உரிமை கோரி ஆளுநரிடம் காங்கிரஸ் கடிதம்!

மணிப்பூரில் திடீர் மாற்றம்;காங்கிரஸ் ஆட்சி அமைக்க அழைக்கக்கோரி மணிப்பூர் மாநில ஆளுநரை சந்தித்து முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ஓ இபோபி சிங் கடிதம் அளித்துள்ளார்.

மொத்தம் 60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கு கடந்த 2017-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக 21 இடங்களிலும், காங்கிரஸ் 28 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றிருந்தாலும், வழக்கம்போல பிற கட்சிகளுக்கு ஆசையை காட்டி குறுக்கு வழியில்  சுயேச்சை ஆதரவுடன் பாஜக தனது ஆட்சியை பிடித்தது. பாஜக முதலமைச்சராக பிரேன் சிங் பொறுப்பேற்றார்.

இதனிடையே நேற்று திடீர் திருப்பமாக பாஜக கட்சியின் மிக முக்கிய ஆதரவு கட்சியான தேசிய மக்கள் கட்சி, டி.எம்.சி கட்சி மற்றும் சுயேட்சையாக ஜிரிபாம் தொகுதியில் நின்று வென்ற எம்.எல்.ஏ ஆகியோர் தங்களது ஆதரவை திரும்பப்பெற்றனர்.

இதனை தவிர பாஜக எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். விரைவில் இவர்கள் காங்கிரஸில் இணையப் போவதாகவும் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர்கள், தங்களது ராஜினாமா தங்களது தனிப்பட்ட முடிவில் எடுக்கப்பட்டது எனக் கூறினர். மேலும், இதற்கான காரணத்தை கேட்டதற்கு அவர்கள் பதிலளிக்க மறுத்து விட்டனர். 9 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு விலகலால் பாஜக அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருந்தது.

இது ஒருபுறம் இருக்க, மணிப்பூரில் உள்ள ஒரே மாநிலங்களவை இடத்துக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. ஆளும் பாஜகவும், காங்கிரசும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நிலையில், மணிப்பூர் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மணிப்பூரில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோரி உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர சட்டமன்றத்தை கூட்டவும், பெரும்பான்மை உள்ள தங்களை ஆட்சி அமைக்க அழைக்கவும் கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக மணிப்பூர் ஆளுநரை முன்னாள் முதல்வர் ஓ இபோபி சிங், சந்தித்துள்ளார். ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரிய கடிதத்தையும் அவர் வழங்கியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top