இதயம் இல்லா அரசு! புலம்பெயர் தொழிலாளர்களின் அவலம்! தாய் இறந்து கிடக்க எழுப்ப முயன்ற குழந்தை…

கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி இந்த அரசுக்கு எந்தவிதமான அக்கறையும் இல்லை.அவர்களை அப்படியே சாக விடுவது என்கிற நிலைபாட்டை எடுத்ததுபோல் தெரிகிறது. ஐம்பது நாளுக்கு பிறகு சுப்ரீம் கோர்ட் இப்போதுதான் கண் திறந்து பார்த்திருக்கிறது.அதுவும் பல சாவுகளை கொடுத்தபின்புதான். அறிஞர்களும் ,சமூக ஆர்வலர்களும் எதிர்கட்சிகளும் தினமும்  புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி  பேசுகிறார்கள். ஆனால், அவைகளை எல்லாம் இந்த அரசு காது கொடுத்து கேட்காமல் இருக்கிறது.இன்னும் எத்தனை உயிர்களை பலிகொடுக்கப்போகிறது இந்த அரசு? 

சமீபத்தில் வைரலாகும் ஒரு வீடியோ. குஜராத்தில் இருந்து பீகார் மாநிலத்திற்கு வந்து சேர்ந்த பெண் இறந்துவிட்ட நிலையில், அதை அறியாத அவரது குழந்தை அவரை எழுப்ப முயன்ற சம்பவம் அனைவரையும் வேதனை அடையச் செய்தது.

ஊரடங்கால் வேலையிழந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். போக்குவரத்து வசதி கிடைக்காத நிலையில், பலர் நடந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. இவ்வாறு செல்லும்போது உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவமும் தொடர்ந்து அரங்கேறுகிறது.

இந்நிலையில் பீகாரில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் நடந்த சம்பவம், புலம்பெயர் தொழிலாளர்களின் சோகத்திற்கு முடிவே இல்லையா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

குஜராத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் பீகார் மாநிலம் முசாபர்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த ஒரு பெண் இறந்துவிட்டார். சரியாக சாப்பிடாததால் ரெயிலில் ஏறும்போதே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பசி, உடல் வெப்பம் அதிகரிப்பு மற்றும் நீர்ச்சத்து குறைந்த நிலையில், ரெயில் முசாபர்பூரை நெருங்கும்போது அவர் இறந்துள்ளார்.

அவரது உடல் ரெயில்நிலைய பிளாட்பாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தாய் இறந்ததை அறியாத அவரது பச்சிளம் குழந்தை, தாயை எழுப்ப முயற்சிக்கிறது. தாய் மீது போர்த்தப்பட்டிருந்த துணியை இழுக்கிறது. அந்த குழந்தையை மூத்த குழந்தை தடுத்து வெளியே இழுக்கிறது. இதைப் பார்த்த அனைவரும் கண்ணீர் விட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதே ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தையும் உயிரிழந்துவிட்டது. அந்த குழந்தையின் பெற்றோர் டெல்லியில் இருந்து வந்த மற்றொரு சிறப்பு ரெயில் மூலம் வந்தவர்கள்.

இந்தியாவில் ஏழைகள் வசிக்க முடியாதா? இந்தியாவை முழுவதும் பணக்கார கார்பரேட்டுக்கு விற்று விட்டோமா ? ஏன் இந்த அரசு ஏழைகள் மீது இரக்கம் காட்ட மறுக்கிறது?

இது இந்தியாவின் பண்பு அல்ல, கடந்த சில வருடங்களாக இந்திய மக்களின் மனநிலையில் மாற்றம் காண முடிகிறது. அது வன்மமும்  குரோதமும் நிறைந்த ஒரு வாழ்க்கையை சுவீகரித்ததுபோல தெரிகிறது! அதற்கு மதமும் ஒரு காரணமாக இருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை.எது எப்படியோ இந்தியாவில் என்பது சதவீதம் ஏழைகளே என்பதை உணருங்கள்! வல்லரசை விட நல்லரசில்தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும்!

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top