ரெயில்கள் புறப்படத் தயார்! மதுரையில் இருந்து இயக்க ஏற்பாடுகள்!

தமிழகத்தில் சென்னை தவிர மற்ற நகரங்களுக்கு இடையே ரெயில் போக்குவரத்தை படிப்படியாக தொடங்குவது வேண்டும் என்று தென்னக ரெயில்வே முடிவு செய்து உள்ளது.

இதற்காக தமிழகத்தில் 4 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. அவற்றில் ஏ.சி. வசதி இல்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்கலாம் என்று ரெயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது.

அதன்படி மதுரை கோட்டத்தில் இருந்து முதல் கட்டமாக ரெயில்களை விடும் பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில் இருந்து சென்னைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தன.

திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்று தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே சென்னைக்கு பதிலாக விழுப்புரம் வரை எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்குவது என்று அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். வருகிற 1-ந் தேதி முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகளை வடிவமைக்கும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தூங்கும் வசதி கொண்ட முன்பதிவு ரெயில் பெட்டியில் உள்ள நடுப்புற படுக்கைகள் அகற்றப்பட உள்ளது. ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் தலா 24 பெட்டிகள் இடம் பெற்றிருக்கும். ஒரு பெட்டியில் 80 இருக்கைகள் உண்டு. இதில் 16 படுக்கைகள் அகற்றப்பட உள்ளது.

எனவே தூங்கும் வசதி கொண்ட 24 ரெயில் பெட்டிகளில் 1200 பேர் வரை சமூக இடைவெளியுடன் பயணம் செய்ய இயலும்.

மதுரை கோட்டத்தில் சமூக இடைவெளியுடன் பயணிகள் டிக்கெட் வாங்கும் வகையில் கவுண்டர்களை வடிவமைப்பது, ரெயில்வே தண்டவாளங்கள் சரி பார்ப்பது உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்கி எஞ்சின் மற்றும் பெட்டிகளின் சீரான இயக்கம் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

மதுரை கோட்ட ரெயில் நிலையங்களில் 6 மீட்டர் இடைவெளியில் வட்டவடிவ கோடுகள் வரையப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக மதுரை கோட்ட ரெயில்வே உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

மதுரை கோட்டத்தை பொறுத்தவரை 150 ரெயில் நிலையங்களிலும் 50 சதவீத ஊழியர்கள் சுழற்சி அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர்.

தமிழகத்தில் ரெயில்கள் இயக்குவது குறித்து ரெயில்வே வாரியம் முடிவு எடுத்து தென்னக ரெயில்வேக்கு தெரிவிக்கும். அதன் பிறகு தான் டிக்கெட் முன் பதிவு உள்ளிட்ட ஆயத்த பணிகள் தொடங்கும்.

மேலும் டிக்கெட் எடுத்து விட்டால் சம்பந்தப்பட்ட பயணிகளுக்கான விதிமுறைகள் என்ன, அரசின் இ-பாஸ் பெற வேண்டுமா? மருத்துவ பரிசோதனை, இருக்கை ஒதுக்கீடு எவ்வாறு இருக்கும் என்பவை உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு தீர்வு கண்ட பின்னரே ரெயில்வே நிர்வாகம் முன்பதிவை தொடங்கும்.

மதுரை கோட்டத்தில் ரெயில்கள் இயக்குவது தொடர்பாக தென்னக ரெயில்வே தான் முடிவு செய்து அறிவிப்புகளை வெளியிடும். அதன்படி நாங்கள் அடுத்த கட்ட பணிகளில் ஈடுபட தயாராக உள்ளோம்”.  என்று அவர்கள் கூறினார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top