மத்திய அரசின் ஊரடங்கு திட்டம் தோல்வி; கொரோனா அதிகரிக்கும்போது ஊரடங்கைத் தளர்த்துகிறார்கள்:ராகுல்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்த ஊரடங்கு திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்போது ஊரடங்கை தளர்த்துவது உலகிலேயே இந்திய அரசாகத்தான் இருக்க முடியும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசு மீது குற்றம் சாட்டினார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. தொடர்ந்து 3 ஊரடங்கை முடிந்து தற்போது 4-வது ஊரடங்கு வரை மத்திய அரசு வந்துள்ளது. ஆனால், முதல் ஊரடங்கு போல் அல்லாமல் 4-வது ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

கடந்த 2 மாதங்களுக்கு மேல் ஊரடங்கில் இந்தியா இருந்தபோதிலும், பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்து 1.45 லட்சமாக அதிகரி்த்துள்ளது. உயிரிழப்பு 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

உள்நாட்டு விமானப் போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட பின் கடந்த 6 நாட்களுக்கும் மேலாக நாள்தோறும் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்துக்கும் மேலாக அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் காணொலி வாயிலாக ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:

”கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்த ஊரடங்கு  திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. பிரதமர் மோடி எதிர்பார்த்ததைப் போல 4 கட்ட ஊரடங்கு திட்டமும் பலனைக் கொடுக்கவில்லை. இந்தக் காலகட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வேகமாக அதிகரித்துவரும் இந்த நேரத்தில் ஊரடங்கை மத்திய அரசு தளர்த்தி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நேரத்தில் ஊரடங்கைத் தளர்த்திய அரசு உலகிலேயே இந்திய அரசாகத்தான் இருக்கமுடியும்.

பிரதமர் மோடியும், அவரின் ஆலோசனை அதிகாரிகளும் ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும், நோயாளிகள் குறைந்துவிடுவார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு கொரோனா பாதிப்பு நாட்டில் குறையவில்லை.

கொரோனா பாதிப்பைச் சமாளிக்க, எதிர்கொள்ள மத்திய அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்று நான் பிரதமர் மோடியிடம் கேட்கிறேன். கொரோனா நோயைக் கட்டுப்படுத்திவிட்டோம், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிவிட்டோம், நடுத்தர, சிறு, குறு தொழில்களுக்கு நிதியுதவி அளித்து ஆதரவுக்கரம் அளித்துவிட்டோம் என மத்திய அரசு நினைத்து வருகிறது.

ஆனால் உண்மையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்த ஊரடங்கு திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன, மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். அடுத்த மாற்றுத்திட்டம் என்ன என்பது குறித்து மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. அந்த மாநிலங்களில் ஏழைகளுக்கும், புலம்பெயர் தொழிலாளர்ளுக்கும் தேவையான நிதியுதவியை வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தி வருகிறார்கள். மத்திய அரசின் உதவியை அவர்கள் நாடவில்லை.

ஆனால், இப்போது விவசாயிகளுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், ஏழைகளுக்கும் நேரடியாக நிதியுதவி வழங்கி வருவதால் மாநிலங்களுக்கு நிதி தேவைப்படுகிறது. மத்திய அரசின் நிதியில்லாமல் செயல்பட முடியாது. ஆனால், இதுவரை மத்திய அரசு அந்த மாநிலங்களுக்கு உதவி அளிக்கவில்லை”. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top