அவகாசம் அளித்திருந்தால் தொழிலாளர்களின் துன்பங்களைத் தவிர்த்திருக்கலாம்:ராமச்சந்திர குஹா

இந்தியப் பிரிவினைக்குப் பின் மிகப்பெரிய துன்பியல் சம்பவம் என்பது ஊரடங்கில் புலம்பெயர் தொழிலாளர்ளுக்கு நேரும் சோகம்தான் வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா

இந்தியப் பிரிவினைக்குப் பின் மிகப்பெரிய துன்பியல் சம்பவம் என்பது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஊரடங்கில் புலம்பெயர் தொழிலாளர்ளுக்கு நேரும் சோகம்தான் என்று வரலாற்று அறிஞரும் பொருளாதார  வல்லுநருமான ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.

இந்திய வரலாற்று அறிஞரும், பொருளாதார வல்லுநருமான ராமசந்திர குஹா பிடிஐ நிருபருக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

இந்தியப் பிரிவினையின்போது நடந்த துயரத்தைப் போல் கொரோனா வைரஸால் உருவான ஊரடங்கில் மக்கள் பாதிக்கப்படவில்லை. ஏனென்றால் இந்தியப் பிரிவினையின்போது மோசமான வகுப்புவாத சம்பவங்கள் நடந்தன.

அதுபோல் இப்போது நடக்கவில்லை என்றாலும், இந்தியப் பிரிவினைக்குப் பின் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய துயரம், ஊரடங்கில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவிக்கும் வேதனைதான்.

ஊரடங்கை  அறிவிப்பதற்கு ஒருவார கால அவகாசம் இடைவெளி கொடுத்திருந்தால் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவிக்கும் துன்பங்களைத் தவிர்த்திருக்கலாம், குறைந்தபட்சம் குறைத்திருக்கலாம்.

இந்த ஊரடங்கு முடிவை பிரதமர் மோடி எவ்வாறு எடுத்தார் எனக்கு எந்தச் சிந்தனையும் இல்லை. அதிகாரிகளுடன் ஆலோசித்தாரா அல்லது மத்திய அமைச்சர்களுடன் ஆலோசித்தாரா அல்லது உண்மையாகவே தன்னிச்சையாக முடிவெடுத்தாரா என்று எனக்குத் தெரியாது.

எதிர்க்கட்சித் தலைவர்கள், நாட்டில் அறிவார்ந்த சிந்தனையாளர்கள் ஆகியோரிடம் பிரதமர் மோடி இப்போது ஆலோசித்தால்கூட சூழலைச் சிறிது மாற்றமுடியும். ஆனால், அவர் செய்யமாட்டார் என்றே எனக்கு உள்ளூர அச்சம் இருக்கிறது. பிரதமர் மோடியின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் தங்கள் பொறுப்புகளை மாநிலங்கள் பக்கம் திருப்புவதிலேயே குறியாக இருக்கிறார்கள். பிரச்சினையை மத்திய அரசுதான் உருவாக்கியது.

ஊரடங்கை அறிவித்தபின் அது நடைமுறைக்கு வருதற்கு 4 மணிநேரம்தான் கால அவகாசம் அளிக்கப்பட்டது. பிரதமரின் ஆலோசகர்கள் ஊரடங்கை உடனடியாகச் செயல்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளைச் சிந்திக்கவில்லை. விரிவடைந்து வரும் மனிதத் துயரங்களுக்கு நேரடியாகவே பொறுப்பேற்றுள்ளார்கள்.

பொதுச் சுகாதாரம், பொருளாதாரம், சமூகம் ஆகிய 3 பிரிவுகளில் துயரங்கள் ஏற்படுகின்றன. புலம்பெயர் தொழிலாளர்கள் மார்ச மாத நடுப்பகுதியில் சொந்த மாநிலம் சென்றிருந்தால், பாதிப்பு குறைவாக இருந்திருக்கும். ஆனால், இப்போது ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, நோயைச் சுமந்து அலைகிறார்கள்.

பொருளாதாரத்தில் அடுக்கடுக்கான விளைவுகளை இனி ஊரடங்கு உருவாக்கும். கொரோனா தொற்றுக்கு முன்பே, பொருளாதாரம் ஏற்கெனவே மோசமான நிலையில் இருந்தது. இப்போது சீர்குலையும் நிலைக்குச் சென்றுவிட்டது. வேலையின்மை அளவு 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சமூகரீதியான, உளவியல் ரீதியான பரிமாணங்கள் முக்கியமாக உள்ளன. ஊரடங்கால் பெரும் துன்பத்தையும், வேதனையையும் அனுபவித்து சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் தாங்கள் வேலை செய்த தொழிற்சாலைக்கோ அல்லது வேலை செய்யும் நகரத்துக்கோ வருவதற்கு விருப்பமின்றியே இருப்பார்கள்.

இந்தியப் பிரவினைக்குப் பின் தேசம் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கல் கொரோனா ஊரடங்குதான். அப்போது நம்மிடம் ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், மிருதுளா சாராபாய், கமலாதேவி சாதோபாத்யாயே போன்ற சுயநிலமில்லா, சிறந்த தலைவர்கள் இருந்தார்கள். அந்தத் தலைவர்கள் தனிப்பட்ட, அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றாகந் செயல்பட்டு இந்தியாவை ஒருங்கிணைத்து, சமூகத்தையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்கள்.

ஆனால் இப்போது மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சுய விளம்பரத்துக்காகவும், சொந்தக் கட்சியின் நலனை வளர்க்கவும் மட்டுமே சிந்திக்கிறார்கள்”. இவ்வாறு ராமச்சந்திர குஹா தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top