200 வென்டிலேட்டர் இந்தியாவுக்கு சும்மா வரவில்லை; அமெரிக்கா 19 கோடிக்கு பில் அனுப்பி உள்ளது!

அமெரிக்காவிடமிருந்து 19 கோடிக்கு 200 வென்டிலேட்டர்களை இந்தியா வாங்குகிறது. கொரோனா நோயாளிகள் மோசமான கட்டத்தை அடையும்போது, அவர்களின் உயிர்காக்க வென்டிலேட்டர் கருவிகள் மிகவும் அத்தியாவசியமானதாக உள்ளன.

தற்போது இந்தியாவிடம் 40,000 வென்டிலேட்டர் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. இது அரசு மற்றும் தனியார் என இரு மருத்துவமனைகளையும் சேர்த்த எண்ணிக்கையாகும். குறைந்தபட்சம் 75,000 வென்டிலேட்டர்கள் தேவையாக உள்ளது. அதிலும் தற்போது அரசு மருத்துவமனைகளில் உள்ள பல வென்டிலேட்டர்கள் செயல்படும் நிலையில் இல்லை. எனவே, வென்டிலேட்டர்களை அதிகளவில் வாங்குவதில் மத்திய சுகாதார அமைச்சகம் ஆர்வம் காட்டி வருகிறது.

ஏற்கனவே உள்நாட்டு நிறுவனங்களிடம் 50,000 வென்டிலேட்டர்களுக்கான ஆர்டர் தரப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவும் இந்தியாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டியது. அமெரிக்காவிலிருந்து நகரும் தன்மை கொண்ட 200 வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அதிபர் டிரம்ப் நிர்வாகம் சம்மதித்துள்ளது.

சமீபத்தில், இந்தியா தனது ஏற்றுமதிகளை தளர்த்திக் கொண்டு, கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. இதற்கு பிரதிபலனாக இப்போது அமெரிக்கா வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு தர சம்மதித்துள்ளது. முதலில் சலுகை விலையில் தருவது போன்று அமெரிக்கா கூறி வந்த நிலையில் தற்போது அதற்கு 19 கோடி பில் போட்டுள்ளது.

அமெரிக்க வென்டிலேட்டரின் விலை 10 லட்சம். சரக்குக் கட்டணம் உள்பட 200 வென்டிலேட்டர்களின் மொத்த விலை 19.2 கோடி ஆகும். 3 வாரத்தில் அதாவது, இந்த மாத இறுதியில் அல்லது அதற்கு முன்னதாக இந்த வென்டிலேட்டர்கள் இந்தியாவை வந்தடையும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு 50,000 வென்டிலேட்டர்களை வாங்க பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து 2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு வென்டிலேட்டர் விலை 4 லட்சம். உள்நாட்டில் 4 லட்சத்தில் வென்டிலேட்டர் கிடைக்கும்போது, எதற்காக அமெரிக்காவிடமிருந்து 10 லட்சம் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும். அதே சமயம், ஐஐடி ரூர்கே 25,000 செலவில் தரமான வென்டிலேட்டர் தயாரித்துள்ளது. ரயில்வேயின் கபூர்தலா ஐசிஎப்பில் 10,000 செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய மருத்துவ கவுன்சிலின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இப்படி உள்நாட்டிலேயே புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தாலும், இங்கிருந்தே வெளிநாடுகளுக்கு தரமான வென்டிலேட்டர்களை தயார் செய்து ஏற்றுமதி செய்ய முடியுமே? இதிலெல்லாம் மத்திய அரசு எந்தளவுக்கு கவனம் செலுத்துகிறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

20லட்சம் கோடி ஒதுக்கி தற்சார்பு இந்தியா என்று பேசிவிட்டு கொரோனா வென்டிலேட்டர் வாங்குவதற்கு உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்காமல் அமெரிக்காவை ஏன் ஊக்குவிக்கவேண்டும் என கேள்வி எழுகிறது?  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top