தாய்லாந்தில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது

da93a2ce-ddde-4309-a2f2-b7d385dd31d2_S_secvpfதாய்லாந்தின் பிரதமர் இங்க்லக் ஷினவத்ரா பதவி விலக வேண்டும் என்று கோரி கடந்த ஆண்டு இறுதியில் துவங்கிய போராட்டங்கள் அங்கு நாளுக்குநாள் அதிகரித்துவந்ததே தவிர பிரச்சினைகளுக்கு எந்த முடிவும் ஏற்படவில்லை.

எதிர்க்கட்சிகள் தந்த நெருக்கடி தாளாமல் தான் பதவியிலிருந்து விலகுவதாக இங்க்லக் அறிவித்தபோதும் தொடர்ந்து காபந்து பிரதமராக பதவியில் நீடித்தார். அதேபோல் அவர்களின் எதிர்ப்பை மீறி கடந்த பிப்ரவரி மாதம் அங்கு பொதுத் தேர்தலையும் அவர் நடத்தினார்.

ஆனால், பல இடங்களில் வேட்பாளர்கள் இல்லாமலும், வாக்குச்சாவடிகளை எதிர்த்தரப்பினர் மறித்த நிலையிலும் நடந்த இந்தத் தேர்தலை அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் செல்லாதென்று அறிவித்தது. இங்க்லக் பதவி விலகி புதிய ஆட்சி அமைப்பு ஏற்பட்டாலே அடுத்த தேர்தலுக்கு ஒத்துழைப்பு அளிக்கமுடியும் என்று கூறும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஆழமான இந்த அரசியல் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக நேற்று அதிகாலை அங்கு ராணுவசட்டம் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதியையும், சட்ட ஒழுங்கையும் நிலை நாட்டுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தாய்லாந்து ராணுவம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் ஒரு கட்டமாக போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக இயங்கிவந்த பல தனியார் தொலைக்காட்சி நிலையங்களை ராணுவத்தினர் தங்களது கட்டுக்குள் கொண்டுவந்தனர். கடந்த 1932-ம் ஆண்டு தாய்லாந்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது.

அதன்பின்னர் அங்கு இதுவரை அந்நாட்டு ராணுவத்தின் மூலம் 11 ஆட்சி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், தற்போது அமலுக்கு வந்துள்ள ராணுவ சட்ட அமலாக்கம் ஆட்சிக் கவிழ்ப்பதற்கான முன்னோடி அல்ல என்று அந்நாட்டு ராணுவத்திற்காக செயல்பட்டுவரும் தொலைக்காட்சி ஒன்றின் தகவல் தெரிவித்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top