தளர்வும் பொருளாதார பலனும் கொண்ட 4-வது கட்ட ஊரடங்கு; நெறிமுறைகள்;அதிகாரிகள் தகவல்

மாநிலங்கள் விரும்பியபடி தளர்வும், பொருளாதார நடவடிக்கையும் கொண்ட 4-வது கட்ட ஊரடங்கு அமைய ஆலோசனை. வழிகாட்டி நெறிமுறைகளை உறுதி செய்யும் பணியில் மூத்த அதிகாரிகள் ஈடுபட்டனர்.

4-வது கட்ட ஊரடங்கு குறித்தும், வழிகாட்டி நெறிமுறைகள் குறித்தும் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் அமித் ஷா நேற்று நீண்ட ஆலோசனை நடத்தினார்.

நேற்று மாலை நார்த் பிளாக் அலுவலகத்தில் தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் ஏறக்குறைய 5 மணிநேரம் பல்வேறு கட்டங்களாக இரவு வரை நீடித்தது. 

மாநில அரசுகள், 4-வது ஊரடங்கில் எவ்வாறு தளர்வுகள் இருக்க வேண்டும் என்ற கருத்துகளை அனுப்பியுள்ளதோ அதன் அடிப்படையில், இறுதிக்கட்ட வழிகாட்டி நெறிமுறைகளை உறுதி செய்யும் பணியில் மூத்த அதிகாரிகள் ஈடுபட்டனர். வரும் 18-ம் தேதிக்கு முன்பாக 4-ம் கட்ட ஊரடங்கு வெளியாகும்,

இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:

”பெரும்பாலான மாநிலங்கள் 4-வது கட்ட ஊரடங்கில் தளர்வு தேவை, பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் எனக் கேட்டுள்ளன. சில மாநில அரசுகள் ஊரடங்கே இம்மாதம் இறுதி வரை நீட்டிக்கவும் ஆதரவு தெரிவித்துள்ளன.

அதற்கு ஏற்றார்போல் மிசோரம் அரசு ஊரடங்கை வரும் 31-ம் தேதி வரை நீட்டித்து நேற்று உத்தரவிட்டுள்ளது. ஷ்ராமிக் ரயில்கள் தவிர மற்ற பயணிகள் ரயில், விமானப் போக்குவரத்தைத் தொடங்க வேண்டாம் என பிஹார் அரசு கேட்டுக்கொண்டுள்ளது

எந்த மாநில அரசும் ஊரடங்கை முழுமையாகத் தளர்த்துங்கள் எனக் கேட்கவில்லை, படிப்படியாக ஊரடங்கைத் தளர்த்தலாம், பொருளாதார நடவடிக்கையைத் தொடங்கலாம் என்றே கேட்டுள்ளன.

அதேசமயம், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மாவட்டங்களை பச்சை, சிவப்பு, ஆரஞ்சு மண்டலங்களாக அறிவிக்க அதிகாரம் தேவை. மத்திய அரசு அறிவிக்க வேண்டாம் எனக் கேட்டுள்ளன. அந்தக் கோரிக்கையும் பரிசீலிக்கப்படலாம். மேலும் ஊரடங்கை நீட்டிப்பது, தளர்த்துவது தொடர்பாக முடிவு செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்படலாம்.

4-வது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் நிச்சயம் இருக்கும். குறிப்பாக பச்சை மண்டலங்கள் முழுமையாக திறக்கப்படும், ஆரஞ்சு மண்டலத்தில் குறைந்த கட்டுப்பாடுகளுடனும், சிவப்பு மண்டலங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் கடும் கட்டுப்பாடுகள் இருக்கும்.

ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என பஞ்சாப், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, அசாம், தெலங்கானா மாநிலங்கள் கேட்டுள்ளன. தங்கள் மாநிலத்தில் பாதிப்பு மண்டலங்களைப் பிரிக்கும் அதிகாரத்தையும் கோரியுள்ளன. இதற்கு அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

4-வது கட்ட ஊரடங்கில் பள்ளிகள், கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படாது. சிவப்பு மண்டலத்தில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதிக்கப்படலாம். ஆனால், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் அனுமதிக்கப்படாது.

ரயில்வே மற்றும் உள்நாட்டு விமானப்போக்குவரத்து அவசியத்தின் அடிப்படையில் முக்கிய நகரங்களுக்கு மட்டும் இயக்க அனுமதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

ஆனால் பிஹார், தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் ரயில், விமானப் போக்குவரத்தை மே மாத இறுதிவரை தொடங்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளன. அதேசமயம் கட்டுப்பாடுகளை பொருளாதார நடவடிக்கைக்காக தளர்த்த தமிழக அரசு சார்பில் கோரப்பட்டுள்ளது. ஆனால், வரும் 31-ம் தேதி வரை மாநிலத்தில் பேருந்துகளை இயக்க தமிழகம், மகாராஷ்டிர அரசுகள் சம்மதிக்கவில்லை.

மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து, மெட்ரோ ரயில் அனைத்தையும் வரும் 31-ம் தேதி வரை இயக்க வாய்ப்பு இல்லை.

குஜராத், டெல்லி, கர்நாடகா, ஆந்திரா, கேரள அரசுகள் 4-வது ஊரடங்கில் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்க தளர்வுகள் தேவை எனக் கோரியுள்ளன.

கேரள அரசைப் பொறுத்தவரை மாவட்டங்களுக்கு இடையே குறைந்த அளவு பயணிகளுடன் பேருந்து போக்குவரத்தைத் தொடங்க ஆர்வமாக இருக்கிறது. ஆனால், ரயில், விமானப் போக்குவரத்தைத் தொடங்க சம்மதிக்கவில்லை.

இந்த 4-வது ஊரடங்கில் புறநகர் ரயில்கள், பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் போன்றவை குறைந்த பயணிகளுடன் இயக்க அனுமதிக்கப்படலாம். மேலும், வாடகைக் கார்கள், ஆட்டோ, டாக்ஸி போன்றவை கட்டுப்பாடுகளுடன் சிவப்பு மண்டலத்தில் இயக்கவும் அனுமதிக்கப்படலாம்”. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top