திங்கட்கிழமை முதல் 50 சதவீத ஊழியர்களுடன் தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும்

திங்கட்கிழமை முதல் 50 சதவீத ஊழியர்களுடன் தமிழகத்தில் எல்லா அரசு அலுவலகங்களும் இயங்குகிறது. அரசு ஊழியர்கள் சுழற்சி அடிப்படையில் பணிபுரிவார்கள்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய- மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 3-வது கட்ட ஊரடங்கு நாளை முடிவுக்கு வரும் நிலையில், மாறுபட்ட தளர்வுகளுடன் அடுத்த கட்ட ஊரடங்கு நாளை மறுநாள் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசின் அனைத்து அலுவலகங்களும் நாளை மறுநாள் திங்கட்கிழமை முதல் பாதி எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஊரடங்கு உத்தரவு குறித்து 3-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையில், அரசு அலுவலகங்களில் அதிகபட்சமாக 33 சதவீத ஊழியர்கள் பணியாற்றலாம் என்று கூறப்பட்டு இருந்தது.

இதன் தொடர்ச்சியாக, 18-ந்தேதியில் (திங்கட்கிழமை) இருந்து அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்து இயங்க அனுமதிக்கப்படுகிறது.

ஏற்கனவே பணி நேரத்தை இழந்திருப்பதால் அந்த இழப்பை ஈடுகட்டும் வகையில், வாரத்தில் சனிக்கிழமை உள்பட 6 நாட்களையும் பணி நாட்களாக முறைப்படுத்தப்பட்டுள்ளது. 6 நாட்களும் தற்போதுள்ள வழக்கமான பணி நேரத்தை பின்பற்றி அலுவலகம் இயங்க வேண்டும்.

அரசு ஊழியர்கள் 2 பிரிவாக பிரிக்கப்பட வேண்டும். முதல் வாரத்தின் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமையில் முதல் பிரிவினர் பணியாற்றுவார் கள். புதன்கிழமை, வியாழக்கிழமையில் இரண்டாம் பிரிவினரும்; வெள்ளிக்கிழமை, சனிக்கிழமையில் முதல் பிரிவினரும் பணியாற்ற வேண்டும்.

அடுத்த வாரத்தின் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமையில் இரண்டாம் பிரிவினரும், புதன்கிழமை, வியாழக்கிழமையில் முதலாம் பிரிவினரும், வெள்ளிக்கிழமை, சனிக்கிழமையில் இரண்டாம் பிரிவினரும் பணியாற்ற வேண்டும்.

இந்த மாற்று வேலைத் திட்டத்தின்படி ஊழியர் வீட்டில் இருந்தாலும், வேலைக்கு அழைத்தால் அலுவலகத்துக்கு வர வேண்டும். சம்பளப் பட்டியலின்படி குரூப் ஏ பிரிவில் வரும் அனைத்து அரசு ஊழியர்களும் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகத்துக்கு வர வேண்டும்.

அதுபோல, சம்பளப் பட்டியலின்படி அல்லாமல், அலுவலகத்தின் தலைமைப் பணியில் இருக்கும் ஊழியர்களும் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகத்துக்கு வர வேண்டும். அனைத்து அதிகாரிகள், ஊழியர்களும் பணிக்கு வர தயாராக இருப்பதோடு, மின்னணு முறை தகவல் பரிமாற்றத்தையும் ஏதுவாக வைத்திருக்க வேண்டும்.

தலைமைச் செயலகத்தில் இருந்து மாவட்டம் மற்றும் கள அளவிலான அரசு அலுவலகங்கள், ஆணையங்கள், வாரியங்கள், அரசு கழகங்கள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களும் இந்த வகையில் இயங்கும்.

போலீஸ், மாவட்ட நிர்வாகம், அரசுக் கருவூலம், உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள் கடந்த மார்ச் 25-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட ஆணைப்படி செயல்படும். அலுவலகத்துக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணையைத் தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு இந்த அரசாணை பொருந்தாது” என்று கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top