ஊரடங்கிலிருந்து மக்கள் வெளியேற மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது? காங்கிரஸ் கேள்வி

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கின் 3-ம் கட்டம் முடிய இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேசிய அளவில் ஊரடங்கிலிருந்து வெளியேற மத்திய அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல்கட்ட ஊரடங்கை அறிவித்த மத்திய அரசு, அதனை 3 கட்டங்களாக நீட்டித்தது. மூன்றாவது கட்ட ஊரடங்கு வரும் 17-ம் தேதியுடன் முடிகிறது. ஆனால், 4-ம்கட்டமாக இருக்கும் என சூசகமாகத் தெரிவித்த பிரதமர் மோடி, பல்வேறு தளர்வுகளோடு வேறுபட்டு இருக்கும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான மணீஷ் திவாரி ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

”இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கும்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 181 ஆக இருந்தது. ஆனால் இப்போது 3-ம் கட்ட ஊரடங்கை மத்திய அரசு அகற்றும்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.

ஊரடங்கு நடைமுறையில் இருந்த நேரத்தில் பிரதமர் மோடி வித்தியாசமான செயல்களில் ஈடுபட்டார். ஆனால் இப்போது கையை மீறி சூழல் சென்றவுடன், மாநிலங்கள் மீது பொறுப்புச் சுமையை ஏற்றி, மக்களை வேதனைப்படுத்துகிறார்கள். புலம்பெயர் தொழிலாளர்களைக் கவனிக்கும் பொறுப்பும் மாநிலங்களைச் சேர்ந்தது என நிதியமைச்சரும் சொல்லிவிட்டார்

ஆளும் அரசுகள் மக்களைச் சந்திக்கவேண்டும். எந்த அரசும் தன்னிச்சையாக செயல்பட முடியாது. ஆதலால், மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரத்தை வழங்க காங்கிரஸ் தொடர்ந்து குரல் கொடுக்கிறது.

தேசிய அளவில் ஊரடங்கை தளர்த்த என்ன திட்டத்தை மத்திய அரசு வைத்திருக்கிறது. அதை வெளிப்படுத்த வேண்டும். 3-ம் கட்ட ஊரடங்கு இன்னும் இரு நாட்களில் முடியப் போகிறது. ஊரடங்கை எவ்வாறு தளர்த்தலாம் என்று பிரதமர் மோடி மாநிலங்களிடம் இருந்து ஆலோசனை பெற்றார். ஆதலால், ஊரடங்கிலிருந்து வெளியேறும் திட்டத்தைக் கூறுங்கள்”. இவ்வாறு மணீஷ் திவாரி தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top