தமிழகத்தில் டாஸ்மாக் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி; பஞ்சாப்புக்கு ஆன்லைனில் மட்டுமே!

பஞ்சாப்பில் ஆன்லைன்லில் விற்பனை செய்யச்சொன்ன உச்சநீதிமன்றம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்க அனுமதி வழங்கி உள்ளது.ஆதார் கார்டும் தேவையில்லை என்றது  

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தது.

டாஸ்மாக் தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், கடைகளை மூடும்படி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி தந்துள்ளது

இதையடுத்து, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளில் மது வாங்க சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்க டாஸ்மாக் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளை தவிர பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படுகிறது.


ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என, வழக்கறிஞர்கள் ராம்குமார் ஆதித்தன், ராஜேஷ், பாலு ,மகளிர் ஆயம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினர் உட்படப் பலரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை கடந்த மே 6-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு, மது வாங்க வருவோருக்கு ஆதார் கட்டாயம் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுக்குட்பட்டு சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் மதுபானக் கடைகளைத் திறக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கை மே 8-ம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மதுக்கடைகளை மூடவும், ஆன்லைன் மூலம் மதுவகைகளை விற்பனை செய்யவும் உத்தரவிட்டது.

நிபந்தனைகளுடன் மது வகைகளை விற்க வேண்டும் என்ற மே 6-ம் தேதி உத்தரவையும், மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்ற மே 8-ம் தேதி உத்தரவையும் எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இதனிடையே மதுக்கடைகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்துத் தொடரப்பட்ட வழக்கை கடந்த 11-ம் தேதி விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, மே 8-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இதற்கும் பொருந்தும் என உத்தரவிட்டது. எனவே, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவையும் எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இதனிடையே, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையில் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக உட்பட 18 பேர் சார்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று (மே 15) தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுக்கள் எல்.நாகேஸ்வர ராவ், எஸ்.கே.கவுல், பி.ஆர்.கவாய் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, வைத்தியநாதன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். எதிர்மனுதாரர்கள் தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நிபந்தனைகளுக்குட்பட்டு மதுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கும், மதுக்கடைகளை மூட வேண்டும் என மே 8-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், எதிர்மனுதாரர்கள் பதில் மனுத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

ஆனால் இதே நீதிமன்றம் பஞ்சாப்பில் ஆன்லைன் மூலம்தான் மதுபானங்கள் விற்பனை செய்யவேண்டும் என தீர்ப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top