அதிமுக அரசின் சீர்கேடு; சிறுமி எரித்துக் கொலை; மே பதினேழு ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கண்டனம்

விழுப்புரத்தில் தந்தையின் மேல் உள்ள பகையால் அவரது மகளைக் கொடூரமாகத் தீவைத்துக் கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தனது முகநூல் பக்கத்தில் கடுமையான கண்டனத்தையும் அதிமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிராக நடந்த சீர்கேட்டையும் பதிவு செய்து இருக்கிறார்.

திருமுருகன் காந்தி முகநூல் பதிவில்;

“ஜெயஸ்ரீயின் படுகொலை மனதை அதிரவைக்கிறது. குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறை அதிமுக அரசினால் தண்டிக்கப்படுவதோ, கண்டிக்கப்படுவதோ இல்லை. இன்று சிறுமி ஜெயஸ்ரீயை ஒரு அதிமுக நபரே கொடூரமாக கொலை செய்திருக்கிறார். இதைவிட வக்கிரமான, மிருகத்தனமான செயலை நாம் பார்க்கமுடியுமா?

எடப்பாடி அரசின் நிர்வாகச் சீர்கேட்டினால் மதுவிற்பனை தொடங்கப்பட்டு பெண்களும், குழந்தைகளும் சீரழிக்கப்படுவதை அன்றாடம் பார்த்து வருகிறோம்.

2018 அக்டோபரில்  சேலத்தில் சிறுமி ராஜேஸ்வரியை கழுத்தறுத்துக் கொலை செய்தது முதல் இன்று நடந்திருக்கும் சிறுமி ஜெயஸ்ரீ கொலை, அதே வருடத்தில் செப்டம்பரில் தேனி அல்லிநகரத்தில் 12வயது சிறுமி ராகவி படுகொலை, 2018 மார்ச் மாதத்தில் கோவை பன்னிமடையில் 6 வயது சிறுமி பாலியல் படுகொலை, 2020 மார்ச்சில் பூந்தமல்லியில் 10 வயதுச் சிறுமி பாலியல் படுகொலை, 2020 சனவரியில் விருதுநகரில் 8 வயது சிறுமி பாலியல் படுகொலை, 2014இல் சேலம் வாழப்பாடியில் 10 வயது சிறுமி பூங்கொடி படுகொலை என பல சிறுமிகள் அதிமுக அரசின் செயலற்றத் தன்மையால் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர், பாலியல் பலத்காரத்திற்கு  சித்திரவதைக்குள்ளாகி இருக்கின்றனர்.

இதில் சேலத்தில் சிறுமி.ராஜேஸ்வரியின்  பாலியல் சித்திரவதை செய்து பின் கழுத்தை அறுத்துக் கொடூரக்கொலையைச் செய்ததைக் கண்டித்தும், குற்றவாளியின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசியதற்காக பிணையில் வர இயலாத வழக்கை என் மீது அதிமுக அரசு பதிந்தது என்பதே இந்த அரசின் யோக்கியதையை அம்பலப்படுத்தும்.

இவற்றில் பெரும்பான்மை மதுபோதையால் நிகழ்ந்திருக்கிறது எனும் உண்மை அப்பட்டமாக வெளிப்பட்டும் இந்த கொடூர செயலை அதிமுக அரசு அனுமதித்துக் கொண்டிருக்கிறது.

இன்று நிகழ்ந்திருப்பது, திருவெண்ணெய்நல்லூர் – சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஜெயஸ்ரீயை அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் முருகனும், கலியப்பெருமாள் ஆகியோர் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இந்த தீக்காயத்தில் இச்சிறுமி இன்று உயிரிழந்திருக்கிறார். இந்தப் படுபாதகக் கொலையை செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது அதிமுக அரசு.

ஜெயஸ்ரீயின் குரல் நம்மை துன்புறுத்துகிறது. எடப்பாடியையோ, அவரது அடிமை அமைச்சர்களையோ இது துன்புறுத்தாது என்பதை தொடர் கொலைகள் நமக்குச் சொல்கின்றன.நம் குழந்தைகள் இப்படி சீரழிக்கப்படுவதை எத்தனைக் காலம் பொறுக்க வேண்டுமென்கிறது அதிமுக அரசு?” என்று திருமுருகன் காந்தி தனது முகநூல் பக்கத்தில் கூறியிருக்கிறார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top