முடிதிருத்தும் நிலையங்களைத் திறக்க அனுமதிக்க வேண்டும்: 5 லட்சம் தொழிலாளர் பாதிப்பு; திருமாவளவன்

5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள முடிதிருத்தும் நிலையங்களைத் உடனடியாகத் திறக்க அனுமதிக்க வேண்டும் என திருமாவளவன் அறிக்கை

5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள முடிதிருத்தும் நிலையங்களைத் திறக்க அனுமதிக்காதது பாரபட்சமாக உள்ளது. அவற்றை உடனடியாகத் திறக்க அனுமதிக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழ்நாட்டில் இன்று முதல் 34 வகையான கடைகளைத் திறப்பதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் முடிதிருத்தும் நிலையங்கள் இடம்பெறவில்லை. இதனால் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, முடிதிருத்தும் நிலையங்களைத் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் முடிதிருத்தும் நிலையங்கள் உள்ளன. அதில் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். கடந்த 50 நாட்களுக்கும் மேலாக முழு அடைப்பு அறிவிக்கப்பட்டிருப்பதால் இவர்கள் எவ்வித வருமானமும் இன்றி வறுமையில் உழல்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் ஈட்டும் வருமானத்தை வைத்தே இவர்கள் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தனர். தற்போது நீண்ட காலமாகத் தொழில் செய்ய முடியாததால் இவர்கள் எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கான நலவாரியத்தில் இவர்கள் எல்லோரும் பதிவு செய்து கொள்ளவில்லை. தமிழ்நாடு முழுவதும் 17,300 பேர் மட்டுமே இந்த நலவாரியத்தில் பதிவு செய்துகொண்டுள்ளனர் என்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 2000 ரூபாய் நிவாரணமும் கூட அதில் சில ஆயிரம் உறுப்பினர்களுக்கு மட்டும்தான் கிடைத்திருக்கிறது. மற்றவர்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் இந்தச் சங்கத்தின் நிர்வாகிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

‘அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என்றாலும் பரவாயில்லை. எங்களைத் தொழில் செய்ய அனுமதித்தாலே போதும்’ என்பதுதான் இவர்களுடைய கோரிக்கையாக இருக்கிறது. 34 விதமான கடைகளைத் திறப்பதற்கு அனுமதி அளித்த தமிழக அரசு முடிதிருத்தும் கடைகளை மட்டும் அனுமதிக்காதது பாகுபாடு காட்டுவதாக இருக்கிறது.

இந்தக் கடைகளால் மட்டும்தான் நோய்த் தொற்று பரவும் என்று தமிழக அரசு நினைப்பது வேடிக்கையாக உள்ளது. நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு என்ன விதமான நிபந்தனைகளை விதிப்பது என்பதை ஆலோசித்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி, முடிதிருத்தும் நிலையங்களையும் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்”. என்று திருமாவளவன் தனது அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top