டெல்லி தமிழக இஸ்லாமியர்களை மீட்க ஐகோர்ட்டில் எஸ்டிபிஐ கட்சி மனு; அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு  பிற மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களைத் தமிழகம் அழைத்துவர எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

எஸ்டிபிஐ மாநில பொதுச்செயலாளர் உமர் பாரூக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில்;

 “டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று, தற்போது அடிப்படை வசதியில்லாமல் 750க்கும் மேற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். இவர்களைத் தமிழகத்திற்கு அழைத்துவர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்யநாராயணா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு வழக்கறிஞர், தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வெளி மாநிலங்களில் சிக்கியிருந்தால் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்வது தொடர்பாக மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல்களுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழக அரசு வழக்கறிஞர் அதற்கு பதிலளித்தார்

“இது தொடர்பாக சிறப்பு அதிகாரி மற்றும் மாநிலம் வாரியாக தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இணையதளங்கள் தொடங்கப்பட்டு அதன் மூலமும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் இருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , “மத்திய அரசின் வழிகாட்டுதல் என்பது கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்குத் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர் அழைத்துச் செல்வதாகும். மத்திய அரசின் இந்த வழிகாட்டுதல்படி அனைத்துப் பரிசோதனைகளும் முடிவடைந்த நிலையில்தான் தப்லீக் ஜமாத்தினர் முகாம்களில் உள்ளனர்.

மேலும், அரசு அவர்களைச் செலவு செய்து அழைத்து வருவதற்கான தார்மீகப் பொறுப்பைத் தட்டிக்கழித்தால், தமிழகம் திரும்ப ஆகும் செலவை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றனர். அதற்கான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள் மூலம் அவர்களை அழைத்து வருவதற்கான கோரிக்கையை தமிழக அரசின் சிறப்பு அதிகாரியிடம் மனுதாரர் சார்பில் அளித்துள்ளோம்.

ஆகவே, மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்க அனைத்துவிதமான முகாந்திரங்கள் உள்ளன” என வாதிட்டார்.

இதனையடுத்து நீதிபதிகள், அனைத்துவிதமான சோதனைகளையும் மேற்கொண்டு, அவர்கள் தமிழகம் வருவதற்கு அனைத்துவிதமான போக்குவரத்துச் செலவுகளையும் ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக உள்ளதால், அவர்களை விரைவாக மீட்டுக் கொண்டு வருதற்கான என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து மே 12-ம் தேதி அன்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

வெளிமாநிலங்களில் சிக்கியுள்ளவர்களை அந்தந்த மாநில அரசுகள் திருப்பி அழைத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது மற்ற மாநிலங்களில் துரிதமாக தங்கள் மாநில குடிமக்களை மாநில செலவில் திரும்ப அழைத்துக்கொள்கிறார்கள் ஆனால் தமிழக அரசோ தங்கள் சொந்த செலவில் வர தயாராக இருக்கும் இஸ்லாமியர்களை கூட அழைத்து வர ஏற்பாடு செய்யாமல் இருப்பது ஏன்? இஸ்லாமியர்களை அழைத்துவர மத்திய அரசின் அனுமதியை பெறவேண்டுமா ?ஏன் இந்த பாரபட்சம் நீதிமன்றம் போய் அவர்களை அழைத்து வர அனுமதியை பெறுவது என்பது எவ்வளவு கொடுமை!


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top