கொரோனாவிலும் கோடை மழை! 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்


சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் 10 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.என சொல்லியுள்ளது

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், கரூர், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

குமரிக்கடல் மற்றும் மாலத்தீவை ஒட்டிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வரை வேகத்தில் வீசக் கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தி மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை ஒட்டி பதிவாகக் கூடும் என்பதால், அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னையை பொறுத்தவரை முற்பகலில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், பிற்பகலில் தெளிவாகவும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் 4 செமீ மழை பதிவாகி உள்ளது.  ஆய்குடியில் 3 செமீ, திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி, கன்னியாகுமரி மாவட்டம் சித்தார், சிவலோகம், சுருளகோடு ஆகிய இடங்களில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top