ஊரடங்கு முடிந்ததும் 18-ந்தேதி முதல் தமிழகத்தில் அரசு பஸ்கள் இயங்கும்!

தமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீதம் பயணிகளுடன் அரசு பஸ்களை இயக்க தயாராக இருக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் பரவியதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பஸ்-ரெயில், விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன.

சிறப்பு விமானங்கள் மற்றும் முக்கிய அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் குறிப்பிட்ட பஸ்-ரெயில்கள் போக்குவரத்து நடை பெறுகிறது.

ஆனால், பொதுமக்கள் சென்று வர பஸ்-ரெயில்கள் இன்னும் இயக்கப்பட வில்லை. ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந்தேதி முடிவடைய உள்ளதால் அதன் பிறகு பஸ்-ரெயில்கள் இயக்கப்படுமா? என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு முடிந்த (மே17) பிறகு பஸ்களை இயக்க போக்கு வரத்து கழகங்கள் தயாராக இருக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் போக்குவரத்து கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீதம் பயணிகளுடன் அரசு பஸ்களை இயங்க தயாராக இருக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒட்டுனர், நடத்துனர்களுக்கு முக கவசம், கையுறை மற்றும் கிருமி நாசினி திரவம் வழங்கப்படும்.

பேருந்து இயக்குவதற்கு முன் ஓட்டுனர், நடத்துனர்கள் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

பயணிகள் இருக்கையில் அமர “மார்க்“ செய்ய வேண்டும். பேருந்தில் நின்று பயணம் செய்தால் போதிய இடைவெளி அவசியம். கட்டாயம் பேருந்தின் ஜன்னல் திறந்திருக்க வேண்டும். பேருந்து நிலைய நிறுத்தத்தில் 5 மீட்டர் இடைவெளி விட்டு நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது.

அதிக கூட்டம் கூடாதவாறு பயணிகள் 6 அடி இடைவெளியில் நிற்பதை உறுதி செய்ய வேண்டும்.

பேருந்தில் பயணம் செய்ய வரும் பொதுமக்கள் முககவசம் அணிந்து வர வேண்டும். தவறினால் பயணம் செய்ய அனுமதிக்கப்படாது. பொதுமக்கள் வரிசையில் நின்று பேருந்துகளில் ஏறுவதை உறுதி செய்ய வேண்டும்.

அதேபோல் கூகுல்பே, இ-பே போன்றவை மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். முடிந்தளவு மாதாந்திர பாஸ் அட்டை பயன்படுத்தலாம்.

பொதுமுடக்கம் முடிந்து பேருந்துகள் இயக்க திட்ட மிடும்போது இது போன்ற நடவடிக்கை பின்பற்ற வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து மண்டலங்களும் இதை கவனமுடன் செயல்படுத்த தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் போக்குவரத்து துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறியுள்ளார்.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

பொது ஊரடங்கு முடிந்த பிறகு கொரோனா பாதிக்காத பகுதிகளில் முதலில் பஸ்களை இயக்க அனுமதிப்பார்கள் என எதிர் பார்க்கிறோம். அனேகமாக வருகிற 18-ந்தேதி பஸ்கள் ஓடும் என்று தெரிகிறது.

இது சம்பந்தமாக அரசு உத்தரவுகளை பின்பற்றி பஸ்களை இயக்க தயாராகவே உள்ளோம். இதற்காக அரசு 25 நிபந்தனைகளை கடைபிடிக்குமாறு எங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

குளிர்சாதன வசதிகள் கொண்ட பஸ்களை இயக்க வேண்டாம் என்றும் அதில் அறிவுறுத்தி உள்ளனர்.

கொரோனா தொற்று பரவியுள்ள பகுதிகளில் பஸ்கள் இயக்கப்படாது. மற்ற பகுதிகளில் பஸ்களை இயக்குவது சாத்தியம் என்பதால் அதற்கேற்ப நாங்கள் தயாராகி வருகிறோம்.

அரசு எப்போது உத்தரவு பிறப்பித்தாலும் பஸ்களை இயக்குவதற்கு நாங்கள் தேவையான நடவடிக்கை எடுப்போம்’. இவ்வாறு அவர் கூறினார் .


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top