கருப்பு பேட்ஜ் அணிந்து ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தார்!

ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் கே. நவாஸ்கனி கருப்பு பேட்ஜ் அணிந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு இடையே மதுக்கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் இதுவரை 4,829 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் (மே 7) முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 10 மணிக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.ஒரு கடைக்கு இரண்டு போலீஸ்காரர்கள் பாதுகாப்புக்கு நிற்கின்றனர்

இதையொட்டி, தமிழ்நாடு அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், தமிழ்நாட்டுக்குப் போதிய நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டிக்கும் வகையிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரும், பொதுமக்களும் தங்களது வீட்டு வாசலில் நின்று முழக்கம் எழுப்ப வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி ராமநாதபுரம் மக்களவை உறுப்பினரும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த நவாஸ்கனி ராமநாதபுரம் மாவட்டம் குருவாடியில் உள்ள தனது வீட்டின் முன்பு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பினார். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

தங்கச்சிமடத்தில் மதிமுகவின் மீனவரணியின் சார்பாக தமிழகத்தில் மதுக்கடை திறப்பதற்கு கருப்பு சட்டை அணிந்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ராமேசுவரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மதுக் கடைகளை திறப்பதை கண்டித்து வீடுகளிலிருந்துப் போராட்டம் நடைபெற்றது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top