ஊரடங்கு இருந்தாலும் ஜூலை 26-ந் தேதி ‘நீட்’ தேர்வு; என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வு தேதியும் அறிவிப்பு!

கொரோனா பீதியில் மக்கள் துன்பப்பட்டுக்கொண்டு இருக்கையில் மாணவர்களுக்கு மேலும் துன்பமாக நீட்’ தேர்வு ஜூலை 26-ந் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.

இதேபோல் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான என்ஜினீயரிங் நுழைவுத் தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி முதல் மூடப்பட்டு உள்ளன. இதனால், மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக கடந்த 3-ந் தேதி நடைபெறுவதாக இருந்த நீட் நுழைவுத் தேர்வை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) தள்ளி வைத்தது.

இதேபோல் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய அரசின் நிதி உதவி பெறும் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத் தேர்வும் தள்ளிவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாணவர்கள் தேர்வு மையங்களை மாற்ற விரும்பினால், அதற்கான வாய்ப்பை தேசிய தேர்வு முகமை வழங்கியது.

இந்த ஆண்டு நீட் தேர்வை எழுத 15 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். ஜே.இ.இ. (மெயின்) தேர்வு எழுத 9 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஜே.இ.இ. (அட்வான்ஸ்டு) தேர்வு எழுத தகுதி பெறுவார்கள்.

இந்த நிலையில், நீட் நுழைவுத்தேர்வு வருகிற ஜூலை மாதம் 26-ந் தேதி நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நேற்று அறிவித்தார். ஆன்லைன் மூலம் மாணவர்களுடன் கலந்துரையாடும் போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதேபோல் ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத்தேர்வு ஜூலை மாதம் 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெறும் என்றும், ஜே.இ.இ. (அட்வான்ஸ்டு) தேர்வு ஆகஸ்டு மாதம் நடைபெறும் என்றும் அப்போது அவர் கூறினார்.

சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இன்னும் சில பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படவில்லை.

இதில், சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு தேதிகள் இன்னும் இரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்து உள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:-

பல்கலைக்கழக மானிய குழுவுடன் நடத்திய ஆலோசனையின்படி செமஸ்டர் தேர்வுகளை ஜூலை 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடத்தலாம். கொரோனா பாதிப்பு நீடித்து தேர்வு நடத்த வாய்ப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டால் இன்டர்னல் மதிப்பீடு 50 சதவீதம், முந்தைய செமஸ்டரில் பெற்ற மதிப்பெண் 50 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கி மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கலாம்.

ஆகஸ்டு 1-ந் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும். கல்லூரியில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.

இளநிலை, முதுநிலை பட்ட வகுப்புகளுக்கு 2020-2021-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் முடிவடையும்.

2020-2021-ம் கல்வி ஆண்டில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி. மாணவர்களுக்கு கல்வி கட்டணம் உயர்த்தப்படமாட்டாது. இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top