அவதூறு செய்ததாக ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது மும்பை போலீஸார் வழக்குப்பதிவு!

மோசமான முன் உதாரணமாக திகழும் ரிபப்ளிக் சேனலின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது மீண்டும் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது

ரிபப்ளிக் சேனலின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேர் மீது மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அவதூறான வார்த்தைகளைப் பேசியதாக மும்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது அவதூறு பரப்பும் நோக்கில் பேசியதாக காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு மாநிலங்களில் புகார் அளித்திருந்தனர். அந்த வழக்கில் 3 வாரங்களுக்கு அர்னாப் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்தச் சம்பவத்தின் கீழ் புதிய பிரிவில் எந்த காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யவும் தடை விதித்திருந்தது.

ஆனால், இப்போது உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட அந்தச் சம்பவத்தோடு தொடர்பில்லாத வேறு ஒரு சம்பவத்தின் கீழ் அர்னாப் மீது மும்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த மாதம் 14-ம் தேதி 2-ம் கட்ட ஊரடங்கு  அறிவிக்கப்பட்டவுடன் மும்பை பாந்த்ரா பகுதியில் ஒரு மசூதி முன் புலம்பெயர் தொழிலாளர்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். இதைக் குறிப்பிட்டு அர்னாப் கோஸ்வாமி கடந்த மாதம் 29-ம் தேதி ரிபப்ளிக் சேனலில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் என்று மும்பை போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

29-ம் தேதி வெளியான நிகழ்ச்சியில் மசூதியின் புகைப்படத்தையும் குறிப்பிட்டு, மக்கள் கூட்டத்தையும் குறிப்பிட்டு அர்னாப் பேசியது மற்ற மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருக்கிறது என ராஸா எஜூகேஷன் வெல்ஃபேர் சொசைட்டி அமைப்பின் செயலாளர் இர்பான் அபுதாகிர் ஷேக் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மும்பை தெற்கு பைதோனி போலீஸ் நிலையத்தில் அர்னாப் கோஸ்வாமி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்திவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அபுதாகிர் ஷேக் கூறுகையில், “கடந்த ஏப்ரல் 14-ம் தேதி புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களைச் சொந்த மாநிலத்துக்கு அனுப்பக் கோரி நடத்திய போராட்டத்துக்கும் மசூதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், மசூதியைக் குறிப்பிட்டும், புகைப்படத்தைக் காண்பித்தும் அர்னாப் கடந்த 29-ம் தேதி நிகழ்ச்சியில் பேசியுள்ளது குறிப்பிட்ட சமூகத்தினரைப் புண்படுத்தும் செயலாகும். அந்தக் கூட்டத்தினருக்கும் மசூதிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், “அர்னாப் மீது ஐபிசி பிரிவ 153, 153-ஏ, 295-ஏ, பிரிவு 500, பிரிவு-511, பிரிவு 120-பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top