ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா –அதிர்ச்சியில் தமிழகம்; பாதிப்பு எண்ணிக்கை 3,023ஆனது

மிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் ஆக்கபூர்வமாக எதுவும் நடைபெறவில்லை என்பதுதான் உண்மை. ஆகையால் , கொரோனா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

இதற்கிடையில், நேற்றிய நிலவரப்படி தமிழகத்தில் 2,757 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும், பலியானோர் எண்ணிக்கை 29 ஆக இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் புதிதாக 203 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 379 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் 203 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில்  கோயம்பேடு காய்கறிச் சந்தையில் பணியாற்றிய தொழிலாளர்கள், வியாபாரிகள், சென்று வந்த பொதுமக்கள் ஆகியோருக்கு தொற்று அதிகரித்துள்ளது.

மே 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில் தமிழக அமைச்சரவை கூடி தமிழகத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை குறித்து விரிவான அறிவிப்பை வெளியிட்டது. அதில் சென்னைக்கு மட்டும் தனியாக அறிவிப்பை வெளியிட்டு உள்ளது

ஊரடங்கைப் படிப்படியாகத் தளர்த்த முடியும், எதையும் அரசே முடிவெடுத்து அறிவிக்கும், நீண்ட காலமாக இந்த வைரஸ் நம்முடன் இருக்கும் என்பதால் நமது வாழ்க்கை முறையையும் நாம் மாற்றி அமைத்தாக வேண்டும் என மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

கரோனா உறுதிப்படுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. 11 மாவட்டங்களில் 63 பேருக்கு தொற்று உள்ளது. 25 மாவட்டங்களில் தொற்று இன்று இல்லை.

தற்போது 35 அரசு ஆய்வகங்கள், 14 தனியார் ஆய்வகங்கள் என 49 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

 டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக, சிகிச்சையில் உள்ளவர்கள் 1,611 பேர். தற்போது தனிமையில் இருப்பவர்கள் 37 ஆயிரத்து 206 பேர். அரசின் கண்காணிப்பில் இருப்பவர்கள் 40 பேர்.

 மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,50,107.  மாதிரி எடுக்கப்பட்ட தனி நபர்களின் எண்ணிக்கை 1,40,716. இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 10,584.

 மொத்தம் தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 3,023. இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 266.தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 187 பேர். பெண்கள் 79 பேர்.

 இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 38 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,379 பேர். இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் ஒருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 30 ஆக உள்ளது.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 203 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் 1,255 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 1458ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் பெருநகரங்களில் சென்னை, இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் எண்ணிக்கைக்கு இணையாகச் செல்கிறது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை அதே எண்ணிக்கையில் 4 அதிகரித்து 146 ஆக உயர்ந்துள்ளது. திருப்பூர் அதே எண்ணிக்கையில் 114 ஆக உள்ளது. திண்டுக்கல் 81, ஈரோடு 70 என்கிற அதே எண்ணிக்கையுடன் உள்ளது. புதிதாக சென்னையில் 203, கோவை 4, திருவள்ளூரில் 2, அரியலூர் 2, கள்ளக்குறிச்சி 6, விழுப்புரம் 33, கடலூர் 9, திருவண்ணாமலை 1, மதுரை 2, , செங்கல்பட்டில் 1, தென்காசி, கன்னியாகுமரி 1, என மொத்தம் 12 மாவட்டங்களில் மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் தொற்று இல்லை.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 170 பேர். இதில் ஆண் குழந்தைகள் 88 பேர். பெண் குழந்தைகள் 82 பேர்.

13 முதல் 60 வயது உள்ளவர்கள் 2,564 பேர். இதில் ஆண்கள் 1732 பேர். பெண்கள் 831பேர்.

60 வயதுக்கு மேற்பட்டோர் 289 பேர். இதில் ஆண்கள் 195 பேர். பெண்கள் 94 பேர்.

15க்கும் மேற்பட்டோருக்கு தொற்றுள்ள, நான்கு நாட்களில் எண்ணிக்கை இரட்டிப்பாகும், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 12.

15 நபர்களுக்குக் கீழ் தொற்று எண்ணிக்கை கொண்ட ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 24.

கடந்த 28 நாட்களாக ஒரு தொற்றும் இல்லாத பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே. இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top