ராஜஸ்தானுக்கு படிக்க சென்ற தமிழக மாணவர்களை அழைத்து வர தமிழகஅரசுக்கு வைகோ வேண்டுகோள்!

ராஜஸ்தானிலிருந்து தமிழ்நாட்டு மாணவர்களை அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

வைகோ இன்று மே 2 ல் வெளியிட்ட அறிக்கையில்;

“இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், ராஜஸ்தான் மாநிலத்தில் தங்கி ஐஐடி நுழைவுத் தேர்வு, ஜேஇஇ முதன்மைத் தேர்வு மற்றும் நீட் தேர்வு பயிற்சி மையங்களில் சேர்ந்து மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக ரயில், விமானப் போக்குவரத்து இல்லாததால், மாணவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் இருக்கிறார்கள். இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களும் உள்ளனர்.

சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 55 மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர் 23 பேர் என மொத்தம் 78 பேர் தமிழகம் திரும்புவதற்கு உதவிடுமாறு ராஜஸ்தான் மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ராஜேஸ்தான் கோட்டா மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாட்டுக்காக நியமிக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு அதிகாரி சரவணகுமார் ஆகியோரிடமும் முறையிட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநில மாணவர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்தவுடன், சிறப்புப் பேருந்துகளை அனுப்பி 2,500 மாணவர்களை கோட்டாவிலிருந்து அழைத்து வர, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டு இருக்கிறார்.

அதைப் போன்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று, ஜார்க்கண்ட் மாணவர்கள் சொந்த ஊர் திரும்ப இரண்டு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்திருக்கிறார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் 78 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதையும், கோட்டா மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

கோட்டா மண்டல ஆணையர் எல்.என்.சோனி கூறும்போது, கோட்டாவில் உள்ள தமிழக மாணவர்களை அழைத்துச் செல்ல இதுவரையில் தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்து இருப்பதையும் அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

எனவே, தமிழக அரசு தமிழ்நாட்டு மாணவர்களை ராஜஸ்தானிலிருந்து சொந்த ஊர்களுக்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என வைகோ வலியுறுத்தியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top