ஊரடங்கு பற்றி மத்திய அரசுக்கே தெளிவில்லை; மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட ஊரடங்கு குறித்து மத்திய அரசுக்கே தெளிவில்லை. முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் கடந்த மாதம் 24-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கை மத்திய அரசு கொண்டு வந்தது. கொரோனா பாதிப்பு குறையாததையடுத்து ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை 2-ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு காலத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு 26 ஆயிரத்தை எட்டியுள்ளது. 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு கொண்டுவருவதற்கு முன்பும், முதல் கட்ட ஊரடங்கு முடியும் முன்பும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கடந்த மார்ச் 20-ம் தேதியும் ஏப்ரல் 2 மற்றும் 11-ம் தேதிகளிலும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் கொரோனா பாதிப்பு குறைவாகவும், பாதிப்பே இல்லாத மாவட்டங்களில் கடந்த 20-ம் தேதி முதல் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்த சூழலில் மே 3-ம் தேதிக்குப் பின் மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை.

பிரதமர் மோடியுடனான ஆலோசனைக் கூட்டம் குறித்து கொல்கத்தாவில் இன்று நிருபர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் “ஊரடங்கு குறித்து மத்திய அரசுக்கு எந்தவிதமான தெளிவும் இல்லை. சுழற்சி அடிப்படையில் முதல்வர்கள் பிரதமர் மோடியுடன் பேச அழைக்கப்படுகிறார்கள். இதில் பிரதமர் மோடியுடன் பேச பல முதல்வர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் பல கேள்விகள் கேட்டிருப்பேன். குறிப்பாக மேற்கு வங்கத்துக்கு ஏன் மத்தியக் குழுவை அனுப்பி வைத்தீர்கள் என்று கேட்டிருப்பேன்.

ஊரடங்கு குறித்த புரிதல், முரண்பட்ட கருத்துககளை மத்திய அரசு தெரிவிக்கிறது. தெளிவின்றி உத்தரவுகள் இருக்கின்றன. ஊரடங்குக்கு நான் ஆதரவாகத்தான் இருக்கிறேன். அதில் சந்தேகமில்லை. ஆனால் ஒருபுறம் ஊரடங்கை அமல்படுத்துங்கள் என்று கடிதம் எழுதுகிறார்கள். மறுபுறம் பிறப்பிக்கும் உத்தரவில் கடைகளைத் திறந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள்.

நீ்ங்கள் கடைகளைத் திறக்க அனுமதித்தால், ஊரடங்கை தீவிரமாக எவ்வாறு அமல்படுத்த முடியும். முதலில் ஊரடங்கு குறித்து முழுமையான புரிதலோடு மத்திய அரசு இருக்க வேண்டும் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top