கொரோனா அச்சம்; உயிரிழந்த மருத்துவர் உடலைப் புதைக்க எதிர்ப்பு; ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது தாக்குதல்

செய்திக்கட்டுரை

கொரோனா பற்றிய பாதுகாப்பு உணர்வையும் ,அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தமிழக அரசு மக்களிடம் கொரோனாவைப் பற்றிய பயத்தை உருவாக்கி வைத்திருப்பது  மிகவும் கவலைப்படவேண்டிய விசயமாக இருக்கிறது.

கொரோனாவைப்பற்றிய அச்ச உணர்வு பொதுமக்களுக்கு எப்படி வந்ததுஅரசு மக்களிடம் நடந்துகொள்ளும் நடைமுறையில்தான் அது வெளிப்படும்.ஒருவேளை உணவுக்கு வெளியே வருபவனிடம் கொரோனாவின் வீரியத்தை சொல்லாமல் லத்தியால் அடித்து விரட்டினால் கொரோனாவைப் பற்றி அவனுக்கு அச்சம் ஏற்படாமல் என்ன ஏற்படும்?   

சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் உடலைப் புதைக்க போன இடத்தில் அந்த பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து அவரது உடலைக் கொண்டுவந்த மருத்துவப் பணியாளர்களைத் தாக்கி, ஆம்புலன்ஸை உடைத்த சம்பவம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அரசு எதை செய்ததோ அதையே மக்களும் செய்கிறார்கள்.என்பதைத்தான் நினைவு கூறுகிறது.

சென்னையில் பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். நேற்றிரவு ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடலைப் புதைக்க அண்ணாநகர் எல்லைக்கு உட்பட்ட காந்திநகர் வேலங்காடு சுடுகாட்டுக்குக் கொண்டு வந்தனர். அப்பகுதி அருகே உள்ள அன்னை சத்யா நகரைச் சேர்ந்த சிலர், மருத்துவர் உடலை இங்கே கொண்டு வரக்கூடாது, திருப்பி எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறித் தகராறில் ஈடுபட்டனர்.ஏனென்றால் கொரோனாவைப் பற்றிய புரிதல் அப்படிதான் தமிழக அரசு அந்த  மக்களுக்கு அளித்திருக்கிறது.

உடன் வந்த பணியாளர்கள் எடுத்துச் சொல்லியும் கேட்காமல் கற்களாலும், கட்டைகளாலும் ஆம்புலன்ஸைத் தாக்கினர். இதனால் ஆம்புலன்ஸின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது. ஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஓட்டுநர் ஆனந்துக்கும் (30) அவருடன் வந்த மற்றொரு பணியாளர் தாமோதரனுக்கும் (28) மண்டை உடைந்தது.

ரத்தம் சொட்டச் சொட்ட அவர்களிடம் தப்பித்து பிரேதத்துடன் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்குத் திரும்பிச் சென்றனர். பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவர் தலையிலும் தையல் போடப்பட்டு கட்டுப் போடப்பட்டது. இருவரும் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

சம்பவம் குறித்துத் தகவலறிந்த போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் தலையிட்டு அதே ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரேதத்தை இரவு 1 மணியளவில் வேலங்காடு கல்லறைக்குக் கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.

மேலும் அப்போதும் போலீஸாருடனும், அதிகாரிகளுடனும் தகராறு செய்து, பணி செய்ய விடாமல் தடுத்த 20 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோரைத் தேடி வருகின்றனர்

கைது செய்யப்பட்டவர்கள் மீது ஐபிசி பிரிவு 188 (ஊரடங்கை மீறுதல்), பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஐபிசி 269 (தொற்றுநோய் தடுப்பு சட்டம்), 145 (சட்டவிரோதமாக கூடுதல்), 341 (இயங்கவிடாமல் தடுத்து சிறைப் பிடித்தல்), 294 (பி) (அவதூறாகப் பேசுதல்), 353 (ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல்), 506 (1) கொலை மிரட்டல் மற்றும் பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு டாக்டர் மக்களுக்கு கொடூர கொரோனா நோய்க்கு சிகிச்சை செய்து அந்த நோய் தாக்கி இறந்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய தியாகம்! இதை தமிழக அரசு என்னவாக உணர்ந்தது? ஏன் முதலிலே போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் போகவில்லை ஒரு அனாதை பிணத்தை அடக்கம் பண்ணுவதுபோல ஏன் தமிழக அரசு செய்ய முயற்சித்தது?

அரசியல் இயக்கங்களும் ,எதிர்கட்சிகளும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு சரியான மருத்துவ உபகரணங்கள் இல்லை அதை தருவித்து கொடுங்கள் என்றதே அப்போதெல்லாம் எதிர்கட்சிகள் அரசியல் செய்கிறது என்று முதலமைச்சர் பேசி திசை திருப்பி விட்டாரே! இப்போது என்ன சொல்லப்போகிறார்.இந்த மாதிரியான பேரிடரின் போது குறைந்த பட்ச ஜனநாயகத்தன்மையோடு நடக்கவேண்டாமா? எல்லாமே போலீஸின் துணைக்கொண்டு பொதுமக்களுக்கு ஒரு அச்சத்தை கொடுத்து அரசை நடத்த திட்டமிட்டு இருக்கிறீர்களா? பத்திரிக்கைகளுக்கு/மீடியாக்களுக்கு  என்ன கடிவாளம் போடப்பட்டிருக்கிறது என்றும் தெரியவில்லை? கொரோனா குறித்த அத்து மீறலை மிகவும் மென்மையாக கையாளுகிறார்கள்.அதுதான் இந்த மாதிரியான நிலைமைக்கு காரணமாகிறது.

கொரோனா குறித்த சமூகப் பரவல் மீது அக்கறையில்லாமல், அரசின் எச்சரிக்கையை மதிக்காமல் ஒரு பக்கம் மக்கள் சாலைகளில் திரிகிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக பத்திரிக்கைகளும் அரசும் சொல்வது கண்டனத்துக்குரியது

இருக்க இடம் இல்லாதவனும் ஒருவேளை உண்ண உணவு கிடைக்காதவனும்தான் சாலையில் யாராவது வாங்கித் தருவார்களா என்று அலைகிறான்.இல்லை தனது சொந்த ஊருக்கு போய் விடலாம் என்று நடந்து செல்கிறான்.ஊரடங்கு அறிவிக்கும் முன் அவனை மாதிரி ஏழை எளியவனுக்கு என்ன திட்டம் வைத்திருந்தது இந்த அரசு? இதை ஏன் கேள்வி கேட்பதில்லை இந்த மீடியாவும், பத்திரிக்கைகளும்?  

கொரோனாவை வெல்கிறோம் என்கிற பெயரில் மனிதத்தை இழந்துக்கொண்டிருக்கிறோம். கொரோனாவைப் பற்றிய பெரிய அச்சத்தை மத்திய தரவர்க்கத்திடம் அரசும், காவல்துறையும் ஏற்படுத்தி இருக்கிறது.அதை சரிபடுத்துங்கள் கொரோனாவை பற்றிய அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் பொதுமக்கள் பங்கேற்போடுதான் கொரோனாவை விரட்ட முடியுமே தவிர காவல்துறையின் லத்தியோடு அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள்!  

சேவற்கொடியோன்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top