சிறு வியாபாரிகளை அடிப்பது,சாலையில் குழி தோண்டி போக்குவரத்தை துண்டிப்பது கொரோனாவை தடுக்குமா ?

தமிழக காவல்துறையும் அரசு நிர்வாகமும் கவனிக்க வேண்டிய விசயங்கள்!

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் அரசு செயல்பாடு குறித்து மாவட்டம் வாரியாக ஆராய வேண்டியதிருக்கிறது.தமிழகஅரசு மக்களை காக்க நடவடிக்கை எடுக்கிறதா? அல்லது மக்களை வஞ்சிக்க நடவடிக்கை எடுக்கிறதா என்கிற சந்தேகம் வருகிறது?

ஊரடங்கு நேரத்தில்  காலை ஆறு மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை மக்கள் வாழ்வாதாரத்துக்கு தேவையான மளிகை பொருட்கள்,காய்கறிகள், இன்ன பிற தேவைகளுக்கு முககவசம் அணிந்து வெளியே வரலாம் என அனுமதித்து இருக்கிறது. ஆனால், நிலைமை வேறாக இருக்கிறது. மக்களுக்கு தெரியப்படுத்திய இந்த அனுமதி அறிக்கை காவல்துறைக்கு தெரியப்படுத்தினார்களா என்பதில் ஐயமாக இருக்கிறது.வெளியே வரும் பொதுமக்களை காவல்துறை கையில் லத்தியோடு வெளியே வராதே என்று அடித்து விரட்டுகிறது.உயர் மட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் டிஜிபி அவர்களும் தினமும் காவல்துறை மக்களிடம் அன்பாக நடந்து கொள்ளவேண்டும் என்று அறிக்கை விடுகிறார்கள். பணியில் இருக்கும் காவல்துறையினர்கள் கேட்பதில்லை.

மற்றும், சிறு வியாபாரிகள் காய்கறி,மற்றும் உணவு பொருட்கள் ,மீன் வியாபாரிகள் ,கறி கடைகள் 1 மணி வரை திறந்திருக்கலாம்.ஆனால் நடைமுறை வேறாக இருக்கிறது. நேற்று மேற்கு மாம்பலம் மேட்டுப்பாளையம் மார்கெட் பகுதியில் மீன் விற்கும் பெண்களை அடித்து விரட்டியது போலீஸ். காய்கறிகள் விற்பவர்களையும் ,மீன் விற்பவர்களையும் பொருட்களை பிடுங்கி கீழே வீசுவதும் ,எடை கற்களை பிடுங்கி வைப்பதுமாக போலீஸ் நடந்து கொள்வது எந்த வகையில் நியாயம்? கொரோனா வில் மக்கள் சாகக்கூடாது என்று நினைக்கும் அரசு,மற்றும் காவல்துறை பட்டினியில் சாகலாம் என்கிறதா ?

ஏழை, எளிய மக்களின் பசி பட்டினியை முழுவதுமாக போக்கவில்லை அவர்கள் செய்கிற சிறு வியாபாரத்தையும் போலீஸ் கொண்டு மிரட்டுகிறது.அவர்கள் என்னதான் செய்வார்கள் மக்கள் ? அரசு அறிக்கையும் டிஜிபி அறிக்கையும் வெறும் கண் துடைப்புக்குதானா ?

இதெல்லாம் நகரத்தில் நடப்பவை இதைவிட கொடுமைகள் எல்லாம் கிராமப்பகுதிகளில் நடக்கிறது

கொரோனாவை தடுக்கிறேன் என்கிற பெயரில் ஏழை, எளிய மக்களை பசி, பட்டினியில் சாகக்கொடுக்கப்பார்கிறது தமிழக அரசு.  பொம்மிடி அருகே மலைவாழ் மக்கள் செல்லும் நெடுஞ்சாலையின் குறுக்கே குழியை  தோண்டி, போக்குவரத்தை துண்டித்து உள்ளது காவல்துறையும் அரசு நிர்வாகமும்

கொரோனா பரவுவதை தடுக்க, சாலைகளை துண்டித்து இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே சேலம் மாவட்ட எல்லையில் பூமரத்தூர், வீராட்சியூர், கரடியூர், முக்கோணம், செம்மநத்தம், புளியூர், நாகலூர், வேப்பாடி, காந்திநகர், செத்தபாளையம் என 20க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் உள்ளது. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள்  உணவு பொருட்கள் வாங்குவது, விவசாய விளைபொருட்களை சந்தைக்கு எடுத்து சென்று விற்பனை செய்வது போன்றவற்றுக்கு பொம்மிடிக்கு வந்து செல்கின்றனர்.

கொரோனா வைரஸ் பரவி வருகிறது என்று  தர்மபுரி மாவட்ட நிர்வாகம், மற்றும் காவல்துறை பொம்மிடி அருகே வீராட்சியூர் பாரஸ்ட் சாலையை பொக்லைன் மூலம் குழி தோண்டி போக்குவரத்தை தடை செய்துள்ளது.

இதனால், மலை கிராம மக்கள் மருத்துவ உதவி, மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய தேவைகள் எதுவும் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, மலைவாழ் மக்களின் அன்றாட பிரச்னைகளை கவனத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும்  சாலையில் உள்ள குழியை மூடவேண்டும்.பொதுமக்களுக்கு இடையூறாக நீங்கள் செயல்படக்கூடாது  என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூகவிரோதிகளிடமிருந்து எங்களை காக்க வேண்டும் என அரசிடம் மக்கள் கோரிக்கை வைப்பது நியாயம். அதை விடுத்து இப்போதெல்லாம் அரசே எங்களை தொந்தரவு செய்தீர்கள் என அரசிடமே கோரிக்கை வைக்கவேண்டியதிருக்கிறது! என்ன நியாயம்?


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top