கொடூர கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை – பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா நிதியுதவி

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே உலுக்கி வலுக்கிறது.


கொரோனா தொற்றால் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஈரான் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

நமது அண்டை நாடான பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 500-ஐ எட்டியுள்ளது. பலி எண்ணிக்கையும் 150-ஐ நெருங்கி வருகிறது.

அங்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து பிரதமர் இம்ரான்கான் அண்மையில் உத்தரவிட்டார்.

ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் அரசு, ஊரடங்கால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பை ஈடுகட்ட முடியாமல் திணறி வருகிறது.

எனவே ஏற்றுமதி துறை, ரசாயன உற்பத்தி ஆலைகள், மின் வணிகம், மென்பொருள் மேம்பாடு மற்றும் காகிதம், சிமெண்டு தொழிற்சாலைகள் மற்றும் உர ஆலைகள் ஆகியவற்றுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு போதிய நிதி இல்லாமல் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு தவித்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்து போராட பாகிஸ்தானுக்கு 84 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.64 கோடியே 24 லட்சம்) நிதியுதவி அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் பால் ஜோன்ஸ் வெளியிட்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

8 மில்லியன் டாலருக்கும் அதிகமான புதிய பங்களிப்புகளுடன், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், பாதிக்கப்பட்ட மக்களை கவனித்துக்கொள்ளவும் பாகிஸ்தான் அரசாங்கத்துடன் அமெரிக்கா ஒத்துழைக்கிறது.

கொரோனா பாதிப்பை கண்டறிதல், அதை தடுத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த நிதி செலவு செய்யப்பட உள்ளது. மேலும், கொரோனாவால் ஏற்படும் அவசர நிலையை சமாளிக்கவும், இந்த நிதியை பயன்படுத்தலாம்.

பாகிஸ்தானில் பெருமளவு கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், மக்களை காக்க நிதி அவசியம். அமெரிக்கா அறிவித்துள்ள இந்த நிதியுதவி அந்த நாட்டிற்கு பெருமளவு உதவியாக அமையும். இவ்வாறு அவர் கூறினார். 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top