இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு;சென்னையில் மட்டும் 50 பேர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 1477 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எணிக்கை ஆயிரத்தை தாண்டியது.

கடந்த 5 தினங்களாக புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை. கடந்த 14-ம் தேதி 31 பேரும், 15-ம் தேதி 38 பேரும், 16-ம் தேதி 25 பேரும், 17-ம் தேதி 56 பேரும், 18-ம் தேதி 49 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று ஏப்.18 வரை தமிழகத்தில் 1,372 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

கடந்த ஐந்து நாட்களாக புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56-க்கு கீழ் இருந்தது. இந்நிலையில் இன்று 105 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 50 பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இதனிடையே, தமிழகத்தில் இன்னும் 2-3 நாட்களில் தமிழகத்தில் புதிதாக வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பூஜ்ஜிய நிலைக்குச் சென்றுவிடும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரு தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.அவர் தெரிவித்த நாளிலிருந்து அதிகமாக கொரோனா தொற்று பரவுவதாக புள்ளி விபரங்கள் கூறுகிறது.

வழக்கமாக ,சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்அல்லது சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷால் அவர்களால் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நடத்தப்படும் தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடத்தப்படவில்லை. மாறாக, தமிழக சுகாதாரத்துறையால் வெளியிடப்படும் வழக்கமான செய்தி அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இன்றைய 105 எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 1477 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 411 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘சென்னையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நான்கு மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 40,876 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 21,381 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 20 பேர் அரசு முகாமிலும் கண்காணிப்பில் உள்ளனர்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top