கொரோனா தடுப்பு நடவடிக்கை; ‘குரல்வழி சேவை’ அறிமுகம் முதல்வர், மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தனர்

தமிழக அரசின் சுகாதாரத் துறை, தமிழ்நாடு மின்னாளுமை முகமை, சென்னை – ஐஐடி மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவை இணைந்து கொரோனா குறித்த சுய தகவல் பதிவு மற்றும் விரைவு நடவடிக்கைக்காக 94999 12345 என்ற குரல்வழி சேவையை உருவாக்கி யுள்ளன.

இந்த குரல்வழி சேவை கொரோனா தடுப்பு நடவடிக்கையின் அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியும் இந்த குரல்வழி சேவை திட்டத்தை முதலமைச்சர் பழனிச்சாமி  மற்றும் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் நேற்று தொடங்கிவைத்தனர்.

இந்த சேவையை, தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் பழனிசாமியும், மத்திய சட்டம்,தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் இருந்தபடியும் காணொலி காட்சி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தனர்.

அப்போது மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்  பேசியதாவது:

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பில் மனிதநேயத்துடன் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி உயிர் இழப்பு ஏற்படாமல் தடுப்பதை உறுதி செய்வதுடன், வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சரியான முறையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியமாகும்.

‘ஆரோக்கிய சேது’ செயலி ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டு கோடிக்கணக்கான மக்கள் அதை பதிவிறக்கம் செய்துள்ளனர் நாடுமுழுவதும் 120 கோடிக்கும் மேற்பட்டவர்கள் கைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர்.

எனவே, இந்த இக்கட்டான சூழலில் நாம் பொதுமக்களை எளிதில்அணுகவும், உரிய நேரத்தில் வைரஸ் தொற்றை கண்டறிந்து,வழிகாட்டுதல்களையும் வழங்க முடியும். இது அவர்களுக்கு மனரீதியிலான வலிமையை அளிக்க உதவும். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து முதல்வர் பழனிசாமி பேசினார்

முதல்வர் பேசும்போது “மனிதனுக்கு எதிரான மிகப் பெரியசவாலாக கொரோனா தொற்று உள்ளது.இந்தியா தனது அனைத்து திறனையும் பயன்படுத்தி அதற்கு எதிராக செயல்பட்டு வருகிறது இந்த குரல்வழி சேவையைப் பயன்படுத்த இணையவசதி தேவையில்லை. எளிமையாக, எளிதில் புரிந்து கொள்ளும் கேள்வி, பதில் வடிவத்தில்,குறிப்பாக அவரவர் தாய்மொழியிலேயே தகவல்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கும் வசதி இதில் உள்ளது” என்று பேசினார் .

இந்த குரல்வழி சேவையானது மொத்த கைபேசி பயனாளிகளில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தாத 60 சதவீத பயனாளிகளுக்காக, கரோனா வைரஸ் மற்றும் அந்த தொற்று நோய் பரவும் விதம் குறித்த பொதுவான கேள்விகளை தானாகபதிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பயனாளிகள் அளிக்கும் பதில்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டறைக்கு மேல் நடவடிக்கைகளுக்காக பகிரப்படும்.

இந்த குரல்வழி சேவையில், பயனாளிகள் ‘மிஸ்டு கால்’ அல்லது குறுந்தகவலை 94999 12345 என்ற எண்ணுக்கு அனுப்பினால், பதிவு செய்த தகவலை குறுஞ்செய்தியாக பயனாளிகள் பெறுவார்கள். தொடர்ந்து பிஎஸ்என்எல் எண்ணில் இருந்து பயனாளிகள் அழைப்பை பெறுவார்கள்.

அப்போது அவர்கள் தங்கள் நோய் நிலை, கரோனா அறிகுறிகள், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்றவை குறித்த தகவல்களை தெரிவிக்கலாம். பயனாளிகள் பதில் மற்றும் இருப்பிடங்களை கண்டறிந்து, தகவல் பரிமாற்றம் மூலம்நோயின் தன்மைக்கேற்ப அவசர ஊர்தி உள்ளிட்ட சேவைகளைபெற அவசர கட்டுப்பாட்டறை உதவி செய்யும்.

நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக இந்த ஆதாரங்களை மாவட்ட அவசர கட்டுப்பாட்டறையும் பெற முடியும் இதில் பயனாளிகள் 3 விதமாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான சேவைகள் வழங்கப்படுகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top