தமிழகத்துக்கு ரூ.9 ஆயிரம் கோடி உடனடியாக ஒதுக்க வேண்டும்: திமுக சார்பில் பிரதமரிடம் கோரிக்கை!

கொரோனா தடுப்பு, நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு கோரிய ரூ.9 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று  அதிமுக வலியுறுத்த மறந்ததை நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பு, நிவாரணப் பணிகள் குறித்து நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது திமுக சார்பில் பங்கேற்ற டி.ஆர்.பாலு பேசியதாவது:

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் போர்க்காலங்களை விட அதிகமான நெருக்கடி நிலையை நம் நாடு சந்தித்து வுருகிறது. இந்தத் தருணத்தில் நாட்டு மக்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டிய மிகப் பெரும் பொறுப்பு நம் எல்லோருக்கும் உள்ளது.

மத்திய, மாநில அரசுகள்மேற்கொள்ளும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் அனைத்துக்கும் திமுக ஒத்துழைப்பு அளிக்கும் என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தருணத்தில் திமுக சார்பில் சில ஆலோசனைகளையும், கோரிக்கைகளையும் முன்வைக்கிறேன்.

*நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2 ஆண்டுகளுக்கு கிடையாது என்பதை திரும்பப் பெற வேண்டும்.

*விரைவாக கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் மருத்துவருக்கான தனிநபர் பாதுகாப்பு சாதனம், வெண்டிலேட்டர், முகக்கவசம் போன்ற கருவிகளை உடனே வழங்க வேண்டும்.

*கொரோனா நிவாரணமாக தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள ரூ.510 கோடி மிகவும் குறைவானது. எனவே, தமிழக அரசு கோரிய ரூ.9 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்கவேண்டும். புதுச்சேரி அரசுக்கும் நிதி ஒதுக்க வேண்டும்.

*ஈரானில் சிக்கித் தவிக்கும் 300-க்கும் மேற்பட்ட மீனவர்களை உடனடியாக தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டித்தால் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு தலா 5ஆயிரம் வீதம் 2 தவணைகளில் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

*கொரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் சுகாதாரம், காவல், உள்ளாட்சித் துறைபணியாளர்கள் அனைவருக்கும் 3 ஊக்க ஊதிய உயர்வு அளிக்க வேண்டும்.

*சிறுகுறு தொழில்கள் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

*நிதி நெருக்கடிகளைச் சமாளிக்க ரூ.20 ஆயிரம் கோடியில் திட்டமிடப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடம் போன்ற பெரிய திட்டங்களை தவிர்க்க வேண்டும்.

*இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் மத வேறுபாடுகளை புகுத்தும் வகையில் பேச முற்படுவதை பிரதமரும், உள்துறை அமைச்சரும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

என்று டி.ஆர்.பாலு பேசினார். அதிமுக  வைக்கவேண்டிய கோரிக்கையையும் சேர்த்து வைத்து, தமிழக நலன் கருதி ஒரு எதிர்கட்சியின் மாண்போடு பேசியது அனைத்து கட்சியினரையும் கவர்ந்தது.  .

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top