மலிவான அணுகுமுறையை தவிர்த்து மக்களை காக்க மோடிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்!

மலிவான அணுகுமுறைகளை தவிர்த்து பிரதமர் மோடி மக்களை பேரழிவிலிருந்து காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று- ஏப்.9 வெளியிட்ட அறிக்கையில்;

“இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி பீதியில் ஆழ்த்தி வரும் கரோனா நோயை தடுப்பதற்காக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் மக்கள் ஊரடங்கு கடைபிடிக் கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் சமூக விலகல், தனிமைப்படுத்துதல் என்கிற அணுமுறையின் மூலமாக கரோனா நோயை எதிர்கொள்ள முடியும் என்று மத்திய, மாநில அரசுகள் கருதுகின்றன. எதிர்கட்சிகளுடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனையின் விளைவாக ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகும் மக்கள் ஊரடங்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் ஊரடங்கு  மேலும் நீடித்தால் இதனால் ஏற்படுகிற பாதிப்புகளை குறித்து மத்திய, மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தவேண்டும் .

மக்கள் ஊரடங்கால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக கைத்தறி நகரம் என்று அழைக்கப்படுகிற கரூர் பகுதியில் மட்டும் ரூபாய் 1,000 கோடி மதிப்புள்ள ஜவுளி துணிகள் தேங்கி கிடக்கின்றன. ஏற்றுமதி ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உற்பத்தி செய்த ஜவுளி துணிகளை எப்படி விற்பது? எங்கே விற்பது? என்று தெரியாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

ஜவுளி தொழிலில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 5 கோடி முதல் ரூபாய் 10 கோடி வரை கரூர் பகுதியில் மட்டும் இழப்பு ஏற்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதேபோல, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழிலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதை நாடு முழுவதும் விரிவுபடுத்தி, ஒப்பிட்டு பார்த்தால் இழப்பின் கடுமையை புரிந்துகொள்ளலாம். இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பவர்கள் ட்ரக் வாகன ஓட்டுநர்கள் ஆவார்கள். இவர்கள் எண்ணிக்கை 30 லட்சம் என்று கூறப்படுகிறது.

மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருப்பதால் இவர்கள் வேலைவாய்ப்பை இழந்திருக்கிறார்கள். இவர்களது 3 மாத ஊதிய இழப்பை ஈடுகட்ட ரூபாய் 25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும்.

அதேபோல, இந்தியாவில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் டிசம்பர் 2019 கணக்கீட்டின்படி மொத்த எண்ணிக்கை 4.25 கோடி ஆகும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதனுடைய பங்கு 29 சதவீதம். ஏறக்குறைய ரூபாய் 61 லட்சம் கோடி இத்துறையின் பங்களிப்பாகும்.

இதனுடைய ஆண்டு உற்பத்தியில் ஊதியச்செலவை 10 சதவீதம் ஆக கணக்கெடுத்தால் தொழிலாளர்களின் ஊதியம் ரூபாய் 6.1 லட்சம் கோடி ஆகும். இதில் ஒரு மாத சம்பளம் ரூபாய் 50 ஆயிரம் கோடி என கணக்கிட்டால் 3 மாதங்களுக்கு ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக கணக்கிடப்படும்.

இதில் 70 சதவீதத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் ரூபாய் 1 லட்சம் கோடியை கொண்டு 45 கோடி தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 2,200 ஊதியம் ஆக மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு வழங்க முடியும். இதை உடனடியாக மத்திய அரசு செய்ய முன்வர வேண்டும்.

நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் அறிவிப்பின்படி கடந்த 4 மாதங்களில் வேலையில்லா திண்டாட்டம் 7.78 சதவீதம் உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. 6 வாரங்களில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூபாய் 50 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கொரோனாவை எதிர்கொள்ள தமிழகம் ரூபாய் 16 ஆயிரம் கோடி மத்திய அரசை கோரியது.

ஆனால், மத்திய அரசு வழங்கியது ரூபாய் 510 கோடி தான். தமிழகத்திற்கு பாரபட்சமான முறையில் குறைவான நிதி ஒதுக்கியது குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

இதில் குறைவாக பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களுக்கு அதிக நிதியும், அதிகமாக பாதிக்கப்பட்ட தமிழகம் புறக்கணித்திருப்பதும் சுட்டிக்காட்டியிருக்கிறது. மத்திய பாஜக அரசால் தமிழகம் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து தமிழக ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. ஆனால், பொதுநல வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக மக்களுக்காக மத்திய அரசிடம் உரிமைக்குரல் எழுப்பியிருப்பதை வரவேற்கிறேன்.

விவசாயிகள், லட்சக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கிற வகையில் பிரதமரின் உரையில் எதுவும் குறிப்பிடாதது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

மக்கள்  ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. விவசாயிகள் உறப்த்தி செய்த பொருளை அறுவடை செய்ய முடியவில்லை. ஏற்கெனவே அறுவடை செய்ததை எடுத்துச் செல்ல போக்குவரத்து வசதியில்லை.

விளைபொருளை வாங்க விற்பனையாளர்கள் இல்லை. ஒட்டுமொத்தமாக விவசாய தொழிலே இன்று முடங்கியிருக்கிறது. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத பிரதமர் மோடி மக்கள் ஆதரவு தமக்கு இருப்பதை உறுதி செய்வதற்காக கைத்தட்ட சொன்னார். விளக்கை அனைத்து, விளக்கை ஏற்ற சொன்னார்.

இனியாவது மலிவான இத்தகைய அணுகுமுறைகளை தவிர்த்து மக்களை பேரழிவிலிருந்து பாதுகாக்க உரிய செயல்திட்டத்தை பிரதமர் மோடி போர்க்கால அடிப்படையில் அறிவிக்க வேண்டும்” என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top