கொரோனா; கர்நாடகாவில் தங்கிய மலைவாழ் தமிழர்கள் உணவின்றி தவிப்பு! அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர் மாவட்டம், ஜவ்வாதுமலையை ஒட்டியுள்ள  மலை ஊராட்சிகளான பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லை என 72 மலை கிராமங்கள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில், பல குடும்பத்தினர் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று கூலி வேலை செய்து வருகின்றனர்.

தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வேலைக்கு சென்ற மலைவாழ் மக்கள் பலர் வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்திற்கு கூலி வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் குடும்பத்தினர் பஸ், ரயில் போக்குவரத்து வசதியில்லாததால் அங்கேயே தங்கி உள்ளனர்.

கொரோனா எதிரொலியால் வேலைக்கு அமர்த்திய நிறுவனம் அவர்களை  கைவிட்டதால் தற்போது  உணவுக்கு கூட வழியில்லாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இருப்பு வைத்திருந்த அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளும் தீர்ந்துவிட்டதால் அவர்கள் சாப்பாட்டுக்கு வழியின்றி தவித்து வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து பதிவிட்ட ஒரு வீடியோ நேற்றுமுன்தினம் முதல் அணைக்கட்டு தாலுகாவுக்குட்பட்ட பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  ‘அதில், நாங்கள் கர்நாடக மாநிலம், சிக்மங்கலூர் மாவட்டம், முழ்கரை தாலுகா பகுதியில் உள்ளோம். கொரோனாவால் 15 நாட்களாக வேலை இல்லை.

போக்குவரத்து வசதியில்லாததால் வீட்டிற்கும் செல்ல முடியவில்லை. இருந்த உணவு பொருட்களும் தீரந்துவிட்டதால் கடந்த 4 நாட்களாக தண்ணீரை குடித்து வாழ்ந்து வருகிறோம். குழந்தைகள், பெண்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, எங்களுக்கு உணவு வழங்கி எங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த வீடியோ முடிகிறது.

இதற்கிடையே கர்நாடக மாநிலத்தில் உணவின்றி தவிக்கும் அணைக்கட்டு தாலுகா மலைவாழ் மக்களை மீட்டு உதவ தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடனடியாக தமிழக அரசு இதில் தலையிட்டு இந்த மக்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்து, அவர்களை இங்கு அழைத்து வரவேண்டும் அவர்களுக்கு தமிழகத்திலேயே வேலைவாய்ப்பை உருவாக்கி தரவேண்டும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top