கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதித்த வாழ்க்கை; டீ குடித்து உயிர்வாழும் மலைவாழ் மக்கள்!

கொரோனா ஊரடங்கு உத்தரவின் காரணமாக பழநி அருகே குட்டிக்கரட்டில் வசிக்கும் மலைவாழ் மக்கள் டீக்குடித்து உயிர்வாழும் அவலநிலைக்கு ஆளாகி உள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில், அடர் வனப்பகுதிகளில் குகைகளில் வசித்து வந்த பளியர் இன மலைவாழ் மக்களை வனத்துறையினர் அழைத்து வந்து மலையோர கிராமங்களில் தங்க வைத்துள்ளனர். இதன்படி மண்திட்டு, குதிரையாறு, பொந்துப்புளி, புளியம்பட்டி, கத்தாளம்பாறை, குட்டிக்கரடு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பளியர் இன மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. மேலும், பள்ளி, ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவையும் வழங்கப்பட்டுள்ளது.பழநி-கொடைக்கானல் சாலையில் கத்தாளம் பாறை, குட்டிக்கரடு ஆகிய இடங்களில் பளியர் இன மலைவாழ் மக்கள் சுமார் 70 பேர் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக மத்திய அரசு 21 நாட்களுக்கு 144 உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பல்வேறு தரப்பினரும் வேலையிழந்து பாதிப்படைந்துள்ளனர். ஆனால், தினக்கூலிக்கு மட்டுமே சென்று வெளி தொடர்பு போதிய அளவு இல்லாமல் வாழ்ந்து வரும் மலைவாழ் மக்கள் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான உணவிற்குக்கூட வழியில்லாமல் டீக்குடித்து உயிர் வாழ்ந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட எல்லையில் இருக்கும் மண்திட்டு மற்றும் பொந்துப்புளி பகுதியில் வசித்து வரும் பளியர் இனமக்களுக்கு திருப்பூர் மாவட்ட வனத்துறையினர் சமையல் பொருட்களை நேற்று முன்தினம் வழங்கி சென்றனர்


ஆனால், திண்டுக்கல் மாவட்ட வனத்துறையால் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் குட்டிக்கரடு பகுதியில் வசிக்கும் பளியர் இனமக்கள் உணவிற்கு வழியின்றி தவித்து வருகின்றனர். இதுகுறித்து குட்டிக்கரடு பகுதியைச் சேர்ந்த பளியர் இனவாசி ஆனந்தன் கூறியதாவது:

சாதாரண நாட்களிலேயே எங்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.20 வருடங்களுக்கு முன்பு எங்களை அழைத்து வந்து இந்த கரட்டுப்பகுதியில் தங்க வைத்தனர். இன்றுவரை போதிய அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. தற்போது 144 தடை உத்தரவு போடப்பட்டிருப்பதால் யாரும் எங்களுக்கு கூலி வேலைக்கு கூப்பிடுவதில்லை. இதனால் உணவிற்கே கடும் தட்டுப்பாடான நிலை நிலவுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் இருக்கின்றனர். பெரியவர்கள் கூட டீக்குடித்து பசியை சமாளித்து கொள்கிறோம். குழந்தைகளை பசியின் கொடுமையில் இருந்து சமாளிக்க முடியவில்லை. மாவட்ட நிர்வாகத்தின் பார்வை எங்கள் மீது பட வேண்டும். இதுபோல் கத்தாளம்பாறையில் வசிக்கும் பளியர்களின் வாழ்வும் பசியில்தான் கழிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இது போன்ற ஏழை எளிய மக்களை கருத்தில் கொள்ளாமல் திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஏற்படுத்திய விளைவுகளை அரசு நினைத்துபார்க்கவேண்டும்.முதலில் இவர்களுக்கும் இது போன்று இன்னும் வெளியே தெரியாமல் இருக்கும் குடும்பங்களையும் கண்டுபிடித்து அவர்களுக்கு வேண்டிய உணவுகளை, வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருட்களை கொடுக்கவேண்டும்.  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top