அரசு மருத்துவமனையில் போராட்டம் கொரோனா வார்டில் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்கு!

செங்கை, அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் அதிக பணிச்சுமை, குறைந்த சம்பளம் காரணமாக தங்களை நிரந்தரமாக்க கோரி போராட்டம் நடத்துகிறார்கள்   

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தூய்மை, பாதுகாப்பு உள்பட பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் சார்பில் ஊழியர்கள் வேலை செய்கின்றனர். இதைதொடர்நது செங்கல்பட்டு மருத்துவமனையில் 90 சதவீதம் பெண்களும், 10 சதவீதம் ஆண்களும், மாதம் ருபாய் 6000 சம்பளத்தில் வேலை செய்கின்றனர். அனைத்து பணிகளையும் இவர்களே செய்ய வேண்டிய நிலை உள்ளது. கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று ஏற்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தனி வார்டில் பணியாற்ற, மருத்துவமனையின் நிரந்தர பணியாளர்களான செவிலியர்கள், துணை செவிலியர்கள் யாரும் முன் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், கடந்த 2 வாரங்களாக கொரோனா வார்டில் தூய்மை பணி, தொற்று உள்ளவர்களுக்கான அனைத்து பணிகளையும் ஒப்பந்த ஊழியர்களே செய்கின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை 200க்கு மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள், கொரோனா வார்டில் பணியாற்ற மாட்டோம் என கூறி, பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று சனிக்கிழமை என்பதால், மருத்துவமனையில் முக்கிய அதிகாரிகள் இல்லை. பணியில் இருந்த ஒருசில அதிகாரிகள், சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து ஒப்பந்த ஊழியர்கள், வேலையை புறக்கணித்து வீட்டுக்கு சென்றனா்.

இதுகுறித்த தற்காலிக ஊழியர்கள் கூறுகையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 300பேர் தற்காலிக ஊழியர்களாக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கிறோம். அவசர சிகிச்சை, பிரசவ வார்டு, பிணவறை உள்பட அனைத்து பகுதிகளிலும் நாங்களே பணி செய்ய வேண்டியுள்ளது.நாங்கள் வேலைக்கு சேர்ந்தது முதல் இங்குள்ள நிரந்தர பணியாளர் எந்த வேலையும் செய்வதில்லை. எங்களுக்கு ரூ6000 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. ஆனால், நிரந்தர பணியாளர்களுக்கு ரூ 60 ஆயிரம் முதல் ரூ1 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்கள்.

கொரோனா வார்டில் கடந்த 2 வாரமாக, நாங்கள் மட்டுமே வேலை செய்கிறோம். நிரந்தர பணியாளர்கள் யாரும் செய்யவில்லை. எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் இருக்கிறோம். அதிக சம்பளம் வாங்குபவர்கள் வேலை செய்யாமல், குறைந்த ஊதியத்தை பெறும் நாங்கள் ஏன் செய்ய வேண்டும். எங்களுக்கு பணி பாதுகாப்பும் இல்லை. ஊதியமும் இல்லை. 90 சதவீத பெண்கள் உள் வேலைகளையும், 10 சதவீத ஆண்கள் வெளி வேலைகளை செய்கிறோம். எங்களுக்கும் குடும்பம், குழந்தைகள் உள்ளனர். நாங்கள் ஏன் பதுகாப்பு இல்லாமல் வேலை செய்ய வேண்டும். மருத்துவம் சம்பந்தமாக படித்தவர்களே வேலை செய்ய முன் வராதபோது நாங்கள் ஏன் உயிரை பணயம் வைத்து செய்ய வேண்டும் என்றனர்.

அரசு உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும். இந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். இன்றைய இக்கட்டான இந்த பேரிடர் சூழலில் மக்களுக்காக உழைப்பவர்களுக்கு உரிய மரியாதையை செலுத்தவேண்டும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top