சிறு குற்றங்களுக்காக இடைக்கால ஜாமீன் விடுவிக்கக்கோரி வழக்கு – தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

சிறு குற்றங்களுக்காக சிறையில் உள்ளவர்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்கத் தலைவராக இருப்பவர் ஜி.மோகனகிருஷ்ணன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், நாடு முழுவதும் உள்ள அனைத்து கோர்ட்டுகளும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளையும் மூட கடந்த மார்ச் 24-ந்தேதி ஐகோர்ட்டு அறிவிப்பாணை வெளியிட்டது.

இதனால், ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட செசன்சு கோர்ட்டுகளில் அவசர வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆனால், மாவட்ட செசன்சு கோர்ட்டுகளில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்படும் மனுக்கள் முறையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை.

சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே, கொடூர குற்றச்செயல்களை தவிர சாதாரண குற்றங்களில் ஈடுபட்ட வழக்கில் கைதானவர்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கலாம் என்று கூறியுள்ளது. ஆனால், இந்த அறிவுரையை கீழ் கோர்ட்டு நீதிபதிகள் பின்பற்றுவது இல்லை. காரணம் எதுவும் கூறாமல் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை 25 நாட்களுக்கு தள்ளிவைத்து விடுகின்றனர்.

நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளதால், இந்த ஜாமீன் மனுக்கள் எல்லாம் இ-மெயிலில்தான் அனுப்பப்படுகின்றன. அவ்வாறு அனுப்பப்படும் மனுக்களை நீதிபதிகள் விசாரணைக்கு எடுப்பது இல்லை. இதனால் சிறு குற்றத்துக்காக சிறைக்கு சென்றவர்கள் ஜாமீன் கிடைக்காமல், அவதிப்படுகின்றனர். 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றால், சம்பந்தப்பட்ட வழக்குகளில் சிறையில் இருக்கும் நபர்களுக்கு விசாரணை கோர்ட்டே ஜாமீன் வழங்கலாம். அப்படி ஜாமீன் பெற தகுதியானவர்களுக்கு கூட கீழ் கோர்ட்டுகளில் ஜாமீன் வழங்குவது இல்லை. இதனால், தேவையில்லாமல் அவர்கள் சிறையில் அவதிப்படுகின்றனர்.

தொற்றுநோய் பரவும் இந்த இக்கட்டான காலத்தில், சிறு குற்றங்களுக்காக சிறையில் உள்ளவர்களுக்கு இடைக்கால ஜாமீனை இந்த ஐகோர்ட்டு வழங்கவேண்டும். தமிழம் முழுவதும் உள்ள அனைத்து கீழ் கோர்ட்டுகளிலும் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, இந்த ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இடைக் கால ஜாமீன் வழங்க வேண்டும்.என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் ‘ஜூம்’ என்ற செயலியை பயன்படுத்தி காணொலி காட்சி வாயிலாக விசாரித்தனர். அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, இந்த மனுவுக்கு வருகிற 8-ந்தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top